கனேமுல்ல சஞ்சீவவின் மரணம் தொடர்பில் வெளியான தீர்ப்பு

கனேமுல்ல சஞ்சீவவின் மரணம், துப்பாக்கிச் சூட்டுக் காயத்தால் மார்பு, கழுத்து மற்றும் வயிற்றில் ஏற்பட்ட பல காயங்களால் ஏற்பட்டதாக கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இன்று (28) தீர்ப்பளித்தார்.
இந்த சம்பவம் தொடர்பான இரண்டு நாள் விசாரணையின் முடிவில் தலைமை நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
இந்நிலையில், கனேமுல்ல சஞ்சீவவின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கையையும் கொழும்பு குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.
தீர்ப்பை அறிவித்த தலைமை நீதவான், விசாரணையின் போது மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புகள் மற்றும் கொழும்பு தடயவியல் வைத்திய அதிகாரி அலுவலகம் சமர்ப்பித்த பிரேத பரிசோதனை அறிக்கையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக தெரிவித்தார்.
இதேவேளை, இந்த விசாரணை கொழும்பு தலைமை நீதவான் முன்னிலையில் அழைக்கப்பட்டபோது, உயிரிழந்த கனேமுல்ல சஞ்சீவவின் சகோதரி தில்ருக்ஷி சமரரத்ன சாட்சியமளித்தார்.
பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் சாட்சியங்களை முன்வைத்து, உயிரிழந்த கனேமுல்ல சஞ்சீவ சம்பந்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்து முழுமையான விசாரணை அவசியம் என்று சுட்டிக்காட்டினர்.
மேலும், அவரது பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்த சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படை அதிகாரிகளின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்துவது முக்கியம் என்றும் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டினர்.
முன்வைக்கப்பட்ட அனைத்து உண்மைகளையும் பரிசீலித்த நீதிபதி, மரணத்திற்கான காரணத்தைக் கூறி தீர்ப்பை அறிவித்தார்.
மேலும், இந்த வழக்கை எதிர்வரும் மார்ச் 7 ஆம் திகதி மீண்டும் விசாரிக்க உத்தரவிடப்பட்டது.