அரசாங்கம் மாறிவிட்டது – அரசு இன்னமும் மாறவில்லை : லால்காந்த கூறுவதென்ன?

அரசாங்கம் மாறினாலும் அரசு இன்னமும் மாறவில்லை என்பதால் அரச ஊழியர்கள் பழைய முறையின் கீழே இன்னமும் பணியாற்றி வருகின்றனர் என அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.
கண்டி ஹலொலுவ பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
அரசு மற்றும் அரசாங்கம் என்பது வேறு வேறானவை. அரசாங்கம் புதியது. அரசு பழையது. இங்கு பழைய அரசு, ஆனால் புதிய அரசாங்கம் உள்ளது. பழைய அரசாங்கங்களுக்கு ஒரு கலாச்சாரம் இருந்தது. அது ஊழல் மிகுந்தது. எமது அரசாங்கம் வேறானது.
அரசை வழிநடத்தும் அதிகாரமே எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த அரசாங்கத்தில் நாம் விரும்புவதை நடைமுறைப்படுத்த ஓர் அரசாக அனைவரும் தயாராக இல்லை. இன்னும் பழைய அரசுதான் உள்ளது. பழைய தவறுகள் இன்னும் நடக்கின்றன. அரசாங்கத்தின் தவறை சரி செய்துள்ளோம். ஆனால் அரசு அதிகாரிகள் இன்னமும் மாறவில்லை.
எனவே, நாட்டை கட்டியெழுப்ப முழு அரசும் மாற வேண்டும். அரசாங்கம் என்பது அரசை வழிநடத்தும் கருவியாகும். அந்தப் பணியையே நாங்கள் செய்து வருகிறோத்” என்றார்.