இலங்கை – இத்தாலி நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தை மீள ஸ்தாபிக்க சபாநாயகர் ஆர்வம்

இலங்கைக்கான இத்தாலி தூதுவர் டாமியானோ ஃபிராங்கோவிக், சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவை நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்தார்.
இச்சந்திப்பில் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார்.
இந்தக் சந்திப்பின் போது, இத்தாலி தூதுவர் டாமியானோ ஃபிரான்கோவிக், இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையிலான நீண்டகால இராஜதந்திர உறவுகளை சுட்டிக்காட்டினார்.
இத்தாலியில் வசிக்கும் இலங்கை மக்கள் அந்நாட்டுப் பொருளாதாரத்திற்கும் இலங்கைக்கு அந்நியச்செலாவணியை அனுப்புவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கும் வழங்கும் பங்களிப்பைப் பாராட்டினார். அத்துடன், இருநாடுகளுக்கும் இடையிலான தற்போதைய இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு இத்தாலி தூதரகம் தயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இலங்கைக்கு வருகை தரும் இத்தாலி சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருவதை சுட்டிக்காட்டிய சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, சுற்றுலாத்துறை தொடர்புகளை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பில் நம்பிக்கை வெளியிட்டார்.
வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் வகையில் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் டிஜிட்டல் மயமாக்கல் முயற்சிகள் பற்றியும் சபாநாயகர் தூதுவரிடம் விளக்கினார். அத்துடன், பத்தாவது நாடாளுமன்றத்தில் இலங்கை – இத்தாலி நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தை மீள ஸ்தாபிக்க எதிர்பார்ப்பதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.
வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், சுற்றுலாத்துறையை மேம்படுத்துதல் மற்றும் இலங்கையர்களுக்கான புதிய வேலை வாய்ப்புகளை கண்டறிதல் தொடர்பிலும் இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டன.