அமெரிக்க குடியுரிமை வேண்டுமா? ட்ரம்ப் அறிமுகப்படுத்திய புதிய வழி

அமெரிக்க குடியுரிமை வேண்டுமா? ட்ரம்ப் அறிமுகப்படுத்திய புதிய வழி

ஒருபக்கம் அமெரிக்கர் அல்லாதவர்கள் அமெரிக்க குடியுரிமை பெறுவதில் கடுமையான சட்ட திட்டங்களை வகுத்து வருகிற ஜனாதிபதி ட்ரம்ப், இன்னொரு பக்கம் கோல்ட் கார்டு மூலம் ‘அமெரிக்கா குடியுரிமை தருகிறோம்…இங்கே வாருங்கள்’ என்று அழைக்கிறார்.

கோல்டு கார்டு என்றால் என்ன?

கோல்ட் கார்டு என்பது விசா திட்டம் ஆகும். இந்த விசாவை பெறுவதன் மூலம் அமெரிக்க குடியுரிமையை பெறலாம். ‘இவ்வளவு தானா?’ என்று எளிதாக நினைக்க வேண்டாம்.

எந்த நாட்டவராக இருந்தாலும் அமெரிக்காவில் குறைந்தது 5 மில்லியன் டொலர் முதலீட்டை செய்யும்போது, ட்ரம்ப் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள கோல்டு கார்டை பெறுவார். கோல்ட் கார்ட் கிடைப்பதன் மூலம் குறிப்பிட்ட அந்த நபருக்கு அமெரிக்க குடியுரிமை கிட்டும்.

கோல்டு கார்டு என்றால் என்ன?

இந்த விசா திட்டம் அமெரிக்காவிற்கு ஒன்றும் புதிதல்ல. தற்போது EB-5 என்ற விசா நடைமுறையில் இருந்து வருகிறது. இதுவும், கோல்ட் கார்டும் கிட்டதட்ட ஒன்று தான். ஆனால், நிபந்தனைகள் வேறானது.

EB-5 விசாவை பெற ஒருவர் அமெரிக்காவில் சுமார் 1 மில்லியன் டொலர் முதலீடு செய்திருக்க வேண்டும் மற்றும் அந்த முதலீடு குறைந்தபட்சம் 10 பணியிடங்களையாவது அமெரிக்காவில் உருவாக்கியிருக்க வேண்டும். இந்த EB-5 விசா திட்டம் 1990ஆம் ஆண்டு அமெரிக்கா காங்கிரஸால் உருவாக்கப்பட்டது ஆகும்.

35 ஆண்டுகளான EB-5 விசா திட்டம் இன்னும் இரண்டு வாரங்களில் கோல்டன் கார்டாக மாற்றப்படும் என்று கூறப்படுகிறது.

என்ன சொல்கிறார் ட்ரம்ப்?

இந்தப் புதிய திட்டம் குறித்து ட்ரம்ப், “அவர்கள் பணக்காரர்களாக மற்றும் வெற்றியாளர்களாக மாறுவார்கள். மேலும், அவர்கள் நிறைய பணத்தை இங்கே செலவிடுவார்கள், நமக்கு அதிகம் வரி செலுத்துவார்கள் மற்றும் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவார்கள். இந்தத் திட்டம் மிகப்பெரிய வெற்றியாக ஆகப்போகிறது” என்று கூறியுள்ளார்.

கோல்ட் கார்டு விசா குறித்து அமெரிக்க வணிக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக், “இந்தக் கோல்ட் கார்டு என்பது கிட்டதட்ட கிரீன் கார்டு போன்றது ஆகும். இது அமெரிக்காவிற்குள் முதலீட்டாளர்களின் வருகையை அதிகரிக்கும் மற்றும் விசா நடைமுறைகளில் நடக்கும் மோசடி மற்றும் சில முட்டாள்தனமான விடயங்களை தடுக்கும். பிற கிரீன் கார்டுகளைப் போல, கோல்ட் கார்டு அமெரிக்க குடியுரிமைக்கு வழிவகுக்கும்” என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் ஒப்புதல் தேவையில்லை

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கொண்டுவரும் சட்ட திட்டங்களில் எவ்வளவு கவனத்துடன் இருக்கிறாரோ அதை விட, அதிக கவனத்தோடு காங்கிரஸ் ஒப்புதல் பெறக்கூடாது என்பதிலும் இருக்கிறார்.

இதுவரை ட்ரம்ப் கொண்டுவந்துள்ள பெரும்பாலான திட்டங்கள் காங்கிரஸ் ஒப்புதல் வேண்டாம் என்பதுப்போலவே உருவாக்கப்பட்டுள்ளது. ஒருவேளை காங்கிரஸ் ஒப்புதல் தேவைப்பட்டால் திட்டங்கள் நடைமுறைக்கு வராது என்பதால் ட்ரம்ப் சட்டங்களை அதற்கேற்ப தான் உருவாக்குகிறார்.

அந்த சட்ட திட்டங்களில் கோல்ட் கார்டும் இணைகிறது. இந்தத் திட்டம் குறித்து பேசும்போது இந்தத் திட்டத்திற்கு காங்கிரஸின் ஒப்புதல் தேவையில்லை என்று அவரே குறிப்பிட்டுள்ளார்.

இதனால் அமெரிக்காவிற்கு என்ன லாபம்?

அமெரிக்கா மீதான மற்றும் அமெரிக்க குடியுரிமை மீதான மோகம் இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதுமே உள்ளது.

ட்ரம்ப் பதவியேற்றதும் ஏற்படுத்தியுள்ள கெடுபிடி குடியுரிமை சட்ட மாற்றங்களால், எளிதாக அமெரிக்கா குடியுரிமையை பெற உலகம் முழுவதும் உள்ளவர்கள் நிச்சயம் தங்களது முதலீடுகளை அமெரிக்காவில் செய்வார்கள்.

இதனால், ட்ரம்ப் கூறியிருப்பதுப்போல புதிய முதலீடுகள் அமெரிக்காவிற்குள் செல்லும்போது அங்கே புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். பின்னர், முதலீடு, வேலைவாய்ப்பு என்று வந்த உடன், வரி தானாக சென்று அமெரிக்க கருவூலத்தை சேரும்.

இதனால் அமெரிக்காவிற்கு என்ன லாபம்?

எந்தவொரு சாதாரண குடிமகனாலும் இவ்வளவு பெரிய தொகையை அமெரிக்காவில் முதலீடு செய்ய முடியாது. ஆக, இந்தத் திட்டம் சாதாரண குடிமக்களுக்கானது அல்ல. இது முழுக்க முழுக்க பணக்காரர்களுக்கானது ஆகும்.

ஒருவர் ஒருமுறை அமெரிக்காவில் முதலீடு செய்து குடியுரிமையை பெற்றுவிட்டால் அவர்கள் திரும்ப திரும்ப தங்களது முதலீட்டுகளை அமெரிக்காவில் குவிப்பார்கள். இது அமெரிக்காவிற்கு மிகப்பெரிய பிளஸாக அமையும்.

இன்னொரு பக்கம், கோல்ட் கார்டு திட்டம் வேலைவாய்ப்பு உருவாக்கத்தைப் பற்றி எதுவும் பேசாததால், இது அமெரிக்காவில் வேலைவாய்ப்பை நிச்சயம் உருவாக்குமா என்பதில் பெரிய சந்தேகம் எழுந்துள்ளது.

EB-5 விசா திட்டம் பொறுத்தவரை, ஒரு ஆண்டுக்கு ‘இவ்வளவு தான்’ வழங்கப்படும் என்ற எண்ணிக்கை இருந்தது. ஆனால், இந்தப் புதிய திட்டத்தில் அப்படி எந்தவொரு எண்ணிக்கையும் இல்லை என்று ட்ரம்ப் கூறியுள்ளார். இந்தத் திட்டம் அமெரிக்காவின் வருமானத்திற்காகவும், பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காகவும் அறிமுகப்படுத்தியுள்ள திட்டம் ஆகும்.

முதலீட்டாளர்கள் விசா என்பது அமெரிக்காவோடு மட்டும் நின்றுவிடவில்லை. இந்த விசா திட்டம் இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகம் முழுவதும் உள்ள 100 நாடுகளில் உள்ளது.

இந்தியர்களுக்கு என்ன பயன்?

EB-5 விசா திட்டத்தின் மூலம் அமெரிக்க குடியுரிமை பெற கிட்டதட்ட 5 – 7 ஆண்டுகள் வேண்டும். அதனால், இந்த விசா மூலம் அமெரிக்க குடியுரிமை பெற காத்திருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை ஏராளம். இப்போது இந்தத் திட்டத்தில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. உடனடியாக குடியுரிமை பெற்றுக்கொள்ளலாம்.

ஆனால், அமெரிக்க குடியுரிமை பெற நினைக்கும் அனைத்து இந்தியர்களாலும் 5 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்ய முடியாது. அதனால், அவர்கள் EB-1, EB-2, EB-3, H-1B போன்ற விசாக்களை நோக்கி தான் நகர வேண்டும்.

பாதகங்கள்
கோல்ட் கார்டு நிறைய சிறப்பம்சங்கள் உள்ளது என்றாலும் இதில் சில பாதகங்களும் உள்ளன.

இன்னும் இதன் நடைமுறை பற்றி தெளிவான விளக்கங்கள் தரப்படவில்லை.

ட்ரம்ப் காங்கிரஸ் ஒப்புதல் தேவையில்லை என்பது கூறியுள்ளது தற்போது அமெரிக்க அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மத்தியில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதனால், நீதி தலையீட்டால் இந்தத் திட்டம் தடைப்படவும் வாய்ப்புள்ளது.

அனைவராலும் 5 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்ய முடியாது என்பது இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய பாதகம்.

Share This