நாகை – காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவை மீண்டும் இடைநிறுத்தம்

வங்கக் கடலில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் பலத்த காற்று காரணமாக பயணிகள் இடையேயான கப்பல் போக்குவரத்து சேவை மூன்று நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை பயணிகள் இடையேயான கப்பல் போக்குவரத்து சேவை இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் நாகை துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன்துறை துறைமுகம் வரை இந்தியா-இலங்கை இடையே கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி ‘செரியாபாணி’ என்ற பெயரில் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது.
வடகிழக்கு பருவமழை உள்ளிட்ட காரணங்களால் அதே மாதம் 23 ஆம் திகதி முதல் அந்த கப்பல் போக்குவரத்து சேவை இடை நிறுத்தப்பட்டது.
அதன்பின்னர் சுபம் என்ற கப்பல் நிறுவனம் மீண்டும் நாகையிலிருந்து காங்கேசன் துறைக்கு ‘சிவகங்கை’ என்ற பெயரில் கப்பலை இயக்க தீர்மானித்து கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி முதல் புதிய பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பமானது.
வாரத்தில் ஐந்து நாட்களுக்கு கப்பல் இயக்கப்பட்டு வந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் தற்காலிமாக சேவை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் இந்தாண்டுக்கான கப்பல் போக்குவரத்து இம்மாதம் 22 ஆம் திகதி தொடங்கியது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் நேற்று முதல் 28 ஆம் திகதி வரை பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தையடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.