நிதியை முறையாகப் பயன்படுத்துவது அதிகாரிகளின் பொறுப்பாகும் – ஜனாதிபதி வலியுறுத்து

வரவுசெலவுத் திட்டத்தில் இருந்து ஒதுக்கப்படும் நிதியை உரிய பணிகளுக்கு திறம்படவும் நியாயமாகவும் பயன்படுத்துவது அரச அதிகாரிகளின் பொறுப்பாகும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
வரையறுக்கப்பட்ட நிதி கட்டமைப்பிற்குள் கூட, இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் வளர்ச்சி முன்னுரிமைகள் மற்றும் மக்களின் தேவைகளை அடையாளம் கண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கும் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் இடையில் இன்று (25) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த விடயம் வலியுறுத்தப்பட்டது.
அதன்படி, செலவினங்களை நிர்வகிப்பதில் அரச அதிகாரிகள் உரிய பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
பொது சேவை தொடர்பில் பொதுமக்களிடம் நல்ல அணுகுமுறை இல்லை என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி, பொது சேவையில் உள்ள திறமையின்மையே இதற்குக் காரணம் என்றும் சுட்டிக்காட்டினார்.