தமிழ்நாட்டின் உரிமையை பாதுகாக்க அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் – ஸ்டாலின் அழைப்பு

அரசியலை கடந்த தமிழ்நாட்டு நலனுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று கூட வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னையில் அமைச்சரவைக் கூட்டத்தை தலைமை தாங்கி நடத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்தவர்,
“தமிழ்நாடு மிகப்பெரிய உரிமைப் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் செயல்கள் மொழிப்போருக்கு வித்திடும் வகையில் உள்ளது. அதற்கு தமிழ்நாடு அரசு தயாரக உள்ளது. நீட், நிதிகுறைப்பு தொடர்பாக ஒன்றிய அரசிடம் பலமுறை வலியுறுத்தியும் பதில் இல்லை.
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தொகுதிகளை குறைக்கும் முயற்சியில் மத்திய பாஜக அரசு இறங்கியிருக்கிறது. தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் கிட்டத்தட்ட 8 தொகுதிகளை குறைக்க நினைக்கிறது.
தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென்னிந்தியா வஞ்சிக்கப்படுகிறது. நீட் மும்மொழிக்கொள்கை, உள்ளிட்ட பிரச்னைகள் அனைத்திற்கும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிகளவில் இருந்தால் தான் குரல் கொடுக்க முடியும். தொகுதிகள் குறைக்கப்பட்டால் நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறைந்துவிடும். ஒட்டுமொத்த எம்.பிக்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் தமிழ்நாட்டிற்கு தான் பாதிப்பு ஏற்படும்.
இந்நிலையில் கூட உள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் மும்மொழிக்கொள்கை மற்றும் நீட் தொடர்பான விவகாரங்கள் விவாதிக்கப்படும் எனவும், அரசியலை கடந்த தமிழ்நாட்டு நலனுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று கூட வேண்டும்.” என முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.