காணாமல்போன மகனைத் தேடி போராடி வந்த ‘மாரி அம்மா’ காலமானார்

வவுனியாவில் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் சுழற்சி முறைப் போராட்டத்தின் 3000 ஆவது நாளான இன்று, தனது மகனைத் தேடி வந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
வவுனியா, தோணிக்கல் பகுதியில் வசித்து வந்த மாரி அம்மா என்றழைக்கப்படும் வேலுசாமி மாரி என்பவரே தனது 79 ஆவது வயதில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவரின் மகனான வேலுச்சாமி சிவகுமார் 2009 ஆம் ஆண்டு இறுதிப் போரில் காணாமல் ஆக்கப்பட்டார்.
இந்நிலையில், மாரி அம்மா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு போராட்டங்களில் முன்னின்று போராடியிருந்தார்.
வவுனியா ஏ – 9 வீதியில் சுழற்சி முறையில் இடம்பெற்று வரும் போராட்டத்திலும் இவர் தொடர்ச்சியாகப் பங்குபற்றியிருந்தார்.
தனது மரணத்துக்கு முன்பதாக தனது மகனை நேரில் பார்த்து விடுவேன் என ஏங்கிய ஒரு தாயின் ஏக்கம் இன்றுடன் நிறைவேறாமல் முற்றுப் பெற்றுள்ளது.