ஜனாதிபதி தரைவழி பயணங்களை தவிர்க்க வேண்டும் – ரவீ கருணாநாயக்க

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது பயணங்களுக்காக ஹெலிகொப்டரை பயன்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவீ கருணாநாயக்க தெரிவித்தார்.
ஜனாதிபதி அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு தரைவழியான பயணம் மேற்கொண்டிருந்ததாகவும் அதற்கு 7-8 மணித்தியாலங்கள் வரை ஆகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதன்படி, ஜனாதிபதி ஹெலிகொப்டர்களைப் பயன்படுத்தினால், முக்கியமான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு செலவிடக்கூடிய பெறுமதியான நேரத்தை மிச்சப்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.
புதிய அரசாங்கத்தின் கீழ் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லம் மூடப்பட்டுள்ளதாகவும், அது பயன்படுத்தப்படாது என்றும் அவர் கூறினார், அதை மூடுவதன் மூலம் அரசாங்கத்தால் 2 மில்லியன் ரூபாயை கூட சேமிக்க முடியாது என்பதை சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சலுகைகளை விட்டுக்கொடுப்பது விரும்பிய பலன்களைத் தராது என்றும் அவர் கூறினார்.
இன்று (24) நாடாளுமன்றத்தில் வரவு செலவு திட்ட விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.