அழகுக்கலை நிலையங்களின் உரிமம் இரத்துச் செய்யப்படும் – வேதநாயகன் எச்சரிக்கை

வடக்கு மாகாண உள்ளூராட்சி அதிகாரசபைகளின் நியமத்துணைவிதிகளின் சட்ட ஏற்பாட்டில் சொல்லப்பட்டுள்ள விடயங்களை மீறிச் செயற்படும் அழகுக்கலை நிலையங்களின் உரிமம் இரத்துச் செய்யப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வடக்கு மாகாண அழகுக்கலை சங்கப் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை (21.02.2025) நடைபெற்றது.
ஒரு சில அழகுக்கலை நிலையங்கள் சங்கத்தின் கட்டுப்பாடுகளை மீறிச் செயற்படுவது தொடர்பில் ஏற்கனவே ஆளுநருக்கு தெரியப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அதற்கு அமைவாக இன்றைய கூட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.
உள்ளூராட்சிமன்றங்களால் உரிமம் வழங்கப்படும்போது உள்ளூராட்சிமன்ற அதிகார எல்லைக்குள் சிகை அலங்கரிப்பு நிலையங்கள், நாவிதன்கடைகள், அழகுக்கலை நிலையங்களை நடாத்திச் செல்வதை முறைப்படுத்தல், ஒழுங்குபடுத்தல், கண்காணிப்புச் செய்தல் மற்றும் கட்டுப்படுத்தல் தொடர்பான நியமத்துணைவிதிகளின் அடிப்படையிலேயே ஒவ்வொரு ஆண்டும் உரிமம் வழங்கப்படுவதாக உள்ளூராட்சி அமைச்சின் செயலர் சுட்டிக்காட்டினார்.
இந்த நியமத்துணை விதியின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கான தலைமுடி வெட்டுதல் கூட எவ்வாறு அமையவேண்டும் என தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளதால் அதற்கு அமைவாகவே அனைத்து அழகக நிலையங்களும் செயற்பட முடியும் என ஆளுநரும் இதன்போது சுட்டிக்காட்டினார்.
நியமத்துணைவிதியை மீறும் அழகக நிலையங்கள் தொடர்பில் அழகக சங்கங்கள் அந்தந்த உள்ளூராட்சிமன்றங்களுக்கு முறைப்பாடு செய்ய முடியும் எனவும் குறிப்பிட்ட ஆளுநர், அதற்கு அமைவாக அத்தகை அழகுக்கலை நிலையங்களின் உரிமத்தை உள்ளூராட்சிமன்றங்கள் எதிர்காலத்தில் இரத்துச் செய்ய முடியும் எனவும் குறிப்பிட்டார்.
அழகுக்கலை நிலையங்கள் தொடர்பான முறைப்பாடுகளைத் தெரிவிப்பதற்கு வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் விசேட தொலைபேசி இலக்கம் ஒன்றையும் வழங்கினார். அந்த இலக்கத்துக்கு முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டால் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் ஊடாகவும் சோதனைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சின் செயலர் குறிப்பிட்டார்.
சில பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு இவ்வாறுதான் தலைமுடி வெட்ட வேண்டும் என நிர்பந்திக்கின்றனர் என அழகக சங்கப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். இதன்போது கருத்து வெளியிட்ட வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலர், சட்டத்தில் இவ்வாறுதான் தலைமுடியை வெட்ட முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதை மீறினால் அழகுக்கலை நிலைய உரிமையாளரின் உரிமமே இரத்துச் செய்யப்படும் எனச் சுட்டிக்காட்டியதுடன், பெற்றோருக்கும் இதை தெரியப்படுத்துமாறு குறிப்பிட்டார்.
அதேபோல சட்டவிரோத செயல்கள் இடம்பெறுவதாக நம்பப்படும் அழகுக்கலை நிலையங்கள் தொடர்பில் முறைப்பாடுகளைத் தெரிவிப்பதற்காக கூட்டத்தில் கலந்து கொண்ட பொலிஸாராலும் விசேட தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டன. மேலும், அழகுக்கலை நிலைய உரிமையாளர்களுக்கு தெளிவூட்டும் கூட்டங்களை சங்கங்கள் ஒழுங்கு செய்தால் அதில் கலந்துகொண்டு விளக்கமளிக்க தயாராக இருப்பதாக பொலிஸாரும் இதன்போது தெரிவித்தனர்.
இந்தச் சந்திப்பில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபாலன், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் செ.பிரணவநாதன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலர் ம.பற்றிக் டிறஞ்சன், தொழில் திணைக்களத்தின் பிரதிநிதிகள், சுகாதாரத் திணைக்களத்தின் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.