பணய கைதியின் சடலத்திற்கு பதிலாக வேறு உடலை ஒப்படைத்த ஹமாஸ் – இஸ்ரேல் விசனம்

பணய கைதியின் உடலுக்கு பதிலாக வேறொரு சடலத்தை ஹமாஸ் ஒப்படைத்துள்ளதாக இஸ்ரேல் குற்றம் சுமத்தியுள்ளது.
கொலை செய்யப்பட்ட பணய கைதியின் சடலத்தை ஒப்படைக்காமல் ஹமாஸ் ஆயுதக்குழு ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றம் சுமத்தியுள்ளார்.
இஸ்ரேலில் இருந்து கடத்தப்பட்டு ஹமாஸ் ஆயுதக்குழுவால் கொலை செய்யப்பட்ட 85 வயதான
ஒடெட் லிப்ஷிட் , 32 வயதான ஷிரி பிபஸ், அவரின் 4 வயது குழந்தை ஏரியல் பிபஸ் மற்றும் 9 மாத கைக்குழந்தை கிபிர் பிபஸ் ஆகியோரின் சடலங்கள் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் சடலங்கள் செஞ்சிலுவை சங்கம் மூலம் இஸ்ரேலிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், நால்வரது சடலங்களும் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில்
ஒடெட் லிப்ஷி, குழந்தைகள் ஏரியல் பிபஸ், கிபிர் பிபஸ் ஆகியோரின் சடலங்கள் உறுதி செய்யப்பட்டன.
ஆனால், 4 ஆவது உடல் ஷிரி பிபசின் உடல் இல்லை என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. டிஎன்ஏ உட்பட அனைத்துவகையிலான ஆய்வுகளுக்குபின் 4வது உடல் ஷிரி பிபசின் உடல் இல்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
மேலும், அந்த உடல் பணய கைதிகள் யாருடைய டிஎன்ஏ உடனும் சேரவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, போர் நிறுத்தத்தின் முதற்கட்ட ஒப்பந்தப்படி ஹமாஸ் ஆயுதக்குழு தங்கள் வசம் உள்ள இஸ்ரேலிய பணய கைதிகளில் மேலும் அறுவரை நாளை ஒப்படைக்க உள்ளது.