பொதுமக்களுக்கு இல்லாத பாதுகாப்பு அரசியல்வாதிகளுக்கு அவசியமில்லை – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

பொதுமக்களுக்கு இல்லாத பாதுகாப்பு அரசியல்வாதிகளுக்கு அவசியமில்லை – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

பொதுமக்களுக்கு இல்லாத பாதுகாப்பு அரசியல்வாதிகளுக்கு அவசியமில்லை எனவும் பொதுமக்களை பாதுகாப்பதிலேயே அரசாங்கம் அதிக அவதானம் செலுத்தி வருவதாகவும் சுகாதார அமைச்சர், அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

கனேமுல்ல சஞ்சீவவுக்கு உரிய பாதுகாப்புகள் வழங்கப்பட்டிருந்த போதே அவர் இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டார் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பிரதான சிங்கள ஊடகமொன்றில் இடம்பெற்ற அரசியல் கலந்துரையாடலில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

“தேசிய பாதுகாப்பு தொடர்பில் அதிக அவதானம் செலுத்தி வருகிறோம். புலனாய்வுப் பிரிவினர் அதிக அவதானத்துடன் செயற்பட்டு வருகின்றனர்.

அண்மைய தினங்களாகவே நாட்டின் பல பிரதேசங்களில் பாதாள உலக செயற்பாடுகள் பதிவாகியிருந்தன. அவை தொடர்பிலும் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கனேமுல்ல சஞ்சீவவின் கொலையை காரணம் காட்டி அரசியல்வாதிகளுக்கு மீண்டும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தையும் எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றன. இது தொடர்பில் எங்களுக்கு எதுவித தீர்மானமும் இல்லை. அந்தந்த அரசியல்வாதிகளுக்கு காணப்படும் அச்சுறுத்தல்களை கொண்டே அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பில் தீர்மானிக்கப்படும்.

உண்மையிலேயே அரசியல்வாதிகள் தங்களது தனிப்பட்ட விடயங்களுக்காக பாதுகாப்பை பயன்படுத்தியுள்ளனர்.

பாதுகாப்புப் படையுடன் கூடிய அரசியல்வாதிகளின் பழைய அரசியல் கலாசாரத்தை மீள உருவாக்குவது தொடர்பில் எங்களிடம் எந்த தீர்மானமும் இல்லை. அந்த கலாசாரத்தை மீள இலங்கையில் உருவாக்க மாட்டோம்.” எனத் தெரிவித்தார்.

Share This