கிளிநொச்சி தீச்சட்டி ஏந்தி பெரும் போராட்டம் – இனியும் எம்மை ஏமாற்றாமல் நீதியைப் பெற்றுத் தாருங்கள்  என வேண்டுகோள்

கிளிநொச்சி தீச்சட்டி ஏந்தி பெரும் போராட்டம் – இனியும் எம்மை ஏமாற்றாமல் நீதியைப் பெற்றுத் தாருங்கள்  என வேண்டுகோள்

சர்வதேச நீதி கோரி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கிளிநொச்சியில் இன்று மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு இதே நாளில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் இன்று எட்டாவது வருடத்தை நிறைவு செய்த நிலையில், வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் மாபெரும் தீச்சட்டி ஏந்திய பேரணி நடைபெற்றது.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட தீச்சட்டி ஏந்திய பேரணி டிப்போ சந்தி வரை சென்றது. இதில் வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் பெருமளவில் கலந்துகொண்டனர்.

இந்தப் போராட்டம் தொடர்பில் வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை எம்மிடம் ஒப்படையுங்கள் எனக்  கோரியும் அல்லது அவர்கள் எங்கே என சிங்கள பேரினவாத அரசிடம் பலமுறை கேட்டும் அதற்கான தீர்வு கிடைக்கவில்லை. எனவே, நாம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கோரி 2017  பெப்ரவரி 20 ஆம் திகதி கிளிநெச்சி கந்தசுவாமி ஆலய முன்பாக ஆரம்பிக்கப்பட்ட தொடர்  போராட்டமானது வடக்கு, கிழக்கு என விரிவுபடுத்தப்பட்டது.

2017 பெப்பரவரி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் எட்டு வருடங்களாக அதாவது இன்றுடன் 2920 நாட்களாக கடந்து தொடர்கின்றது. 2009 மே 18 இல் முள்ளிவாய்க்காலில் போர் மொளனிக்கப்பட்டு 16 ஆண்டுகள் ஆகின்றன.

இன்றும் இனப்படுகொலை தொடர்ந்த வண்ணம் உள்ளன. ஆனால், இலங்கையில் ஜனாதிபதிகளும் ஆட்சியாளர்களும் மாறினாலும் தொடர்ந்தும் இனப் படுகொலைக்கான நீதி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி, நேரடியாக படையினர்களிடம் சாட்சியங்களுடன் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது  என்பது தொடர்பான நீதி இதுவரை  கிடைக்கவில்லை.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தினராகிய நாம் 2017 தொடக்கம் இன்று வரையும் உள்நாட்டில் பல போராட்டங்களை நடத்தினோம். இலங்கை அரசின் நீதித்துறையில் நம்பிக்கையில்லை என்ற ஒரு காரணத்தினால் நாம் சர்வதேச நீதி விசாரணை வேன்டும் எனப் பல தடவைகள் கோரிக்கைகளை முன்வைத்து போராடி வருகின்றோம்.

சர்வதேச நாடுகளின் இராஜதந்திரிகளுக்கு மகஜர்களையும் அனுப்பினோம். நேரடியாக ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் நேரடியாகச் சென்று ஆவணங்களை ஆதாரத்துடன் கையளித்தோம். ஆனால், இதுவரை எமக்கான நீதி கிடைக்கவில்லை.

2015 ஆட்சியில் இருந்த நல்லாட்சிக் காலம் எனச் சொல்லப்படும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 2019 ல் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ,2022 இல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரையான சகல அரசுகளும் எம்மை ஏமாற்றியுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தி மூலம் தற்போதய புதிய ஜனாதிபதியாக கடந்த 2024 செப்டெம்பர் பதவியேற்ற அநுரகுமார திஸாநாயக்க 2024 நவம்பர் 159 நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து மூன்று மாதங்கள் கடந்த நிலையிலும் எந்தவொரு நல்லெண்ணமும் அவர்களின் செயலில் தென்படவில்லை. மாறாக புலனாய்வாளர்களை ஏவி விட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தாய்மாரைக் கண்காணிப்பதுடன் அவர்களைச் சுதந்திரமாக தமது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கேட்டு நடத்தும் கவனயீர்ப்புப் போராட்டங்களில் கலந்துகொள்ள விடாமல் நீதிமன்ற தடை உத்தரவுகளைக் கொடுத்து ஜனநாயக வழிப் போராட்டத்தை அடக்கி ஒடுக்கி தடுக்கும் அடாவடிச் செயல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை. ஜனாதிபதிகளின் பெயர்கள் மாறியுள்ளன செயல்கள் மாறவில்லை. வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுடைய பெற்றோர்கள் இதுவரை 300 இற்கும் மேற்பட்ட தமது உறவுகளின் உண்மை நிலையறியாது வேதனையுடன் உயிர் இழந்த பரிதாபங்கள் வடக்கு, கிழக்கில் நடந்துள்ளன. எங்கள் வேதனைகளையும் வலிகளையும் உண்மைகளையும் இலங்கை அரசு புரியவில்லை. அதேபோல் சர்வதேசமும் புரியவில்லை என்பதையே கடந்த எட்டு வருங்களாக நாங்கள் கண்ட உண்மை.

அரசுகள் மாறும் போது எல்லா சர்வதேச இராஜதந்திரிகளும் நாடுகளின் தலைவர்களும் ஏன் ஐக்கிய நாடுகள் சபைகளும் கூட இலங்கை அரசைக்  காப்பாற்றும் ஒரு செயலாக கால அவகாசங்களை வழங்கி கால நீடிப்பைச்  செய்து வருவதை நாம் எட்டு வருடங்களாக அவதானித்து வந்துள்ளோம் என்ற உண்மையைக் கவலையுடனும் கண்ணீருடனும் மனவேதனையடனும் இந்த எட்டு ஆண்டு நிறைவில் பதிவு செய்கின்றோம். எனவே, இந்த உண்மைகளை உணர்ந்து இனியும் எம்மை ஏமாற்றாமல் எங்கள் உணர்வுகளை மதித்து சர்வதேச நீதி கிடைக்க ஆவன செய்யுமாறு சர்வதேசத்திடம் வேண்டுகின்றோம்.” – என்றுள்ளது.

Share This