தசுன் ஷானகவுக்கு 10 ஆயிரம் டொலர் அபராதம்

தசுன் ஷானகவுக்கு 10 ஆயிரம் டொலர் அபராதம்

ஒப்பந்தக் கடமைகளை மீறியதற்காக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தசுன் ஷானகவுக்கு இலங்கை கிரிக்கெட் சபை (SLC) 10,000 அமெரிக்க டொலர் அபராதம் விதித்துள்ளது.

தசுன் ஷானக கடந்த இரண்டாம் திகதி (பெப்ரவரி 02) நடைபெற்ற உள்நாட்டுப் போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக மூன்று நாட்கள் விடுப்பு கோரியதாகவும், ஆனால் அந்தக் காலகட்டத்தில் துபாயில் நடந்த லீக் போட்டியில் பங்கேற்றதாகவும் இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தசுன் ஷானகவின் எழுத்துப்பூர்வ பதிலையும் மன்னிப்பையும் கருத்தில் கொண்டதாகத் தெரிவித்த இலங்கை கிரிக்கெட் சபை, ஷானகவின் செயல்கள் ஒப்பந்தக் கடமைகளை மீறுவதாக நிர்வாகக் குழு தீர்மானித்துள்ளதாகக் கூறியது.

எனவே, ஒழுக்காற்று நடவடிக்கையாக 10,000 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்க இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகக் குழு முடிவு செய்துள்ளது.

மேலும் பெப்ரவரி 28ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் அபராதத்தை செலுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. இணங்கத் தவறினால் மேலும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் இலங்கை கிரிக்கெட் சபை எச்சரித்துள்ளது.

அண்மையில் உள்ளூர் போட்டியில் விளையாடும் போது ஷானக கழுத்தில் காயம் அடைந்ததாகக் கூறப்படுகிறது.

அந்த நேரத்தில், சிங்கள விளையாட்டுக் கழகத்திற்காக (SSC) விளையாடிய ஷானக, மூர்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு எதிரான ஆட்டத்தின் போது காயம் அடைந்ததாக போட்டி நடுவருக்குத் தெரிவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஷானக தொடர்ந்து சிவப்பு பந்து கிரிக்கெட்டை விளையாடுவதில்லை என்றும், SSC தரமிறக்கப்படுவதை எதிர்கொண்டதால் தானாக முன்வந்து போட்டியில் சேர்ந்ததாகவும், ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்திய மருத்துவ அறிக்கையைப் பெற்ற பின்னரே ஆட்டத்தை விட்டு வெளியேறியதாகவும் SSC வட்டாரங்கள் தெரிவித்தன.

 

Share This