சாரதி பற்றாக்குறையால் நாளொன்றுக்கு 50 ரயில்கள் இரத்து

பல ஆண்டுகளாக ரயில் சாரதிகளுக்கான வெற்றிடங்களை நிரப்பத் தவறியதே ரயில் சேவைகள் குறைக்கப்படுவதற்கும் இரத்து செய்யப்படுவதற்கும் முதன்மையான காரணம் என ரயில்வே சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நிலைமை தொடர்ந்தால், ரயில் சேவைகளின் செயல்பாட்டில் கடுமையான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்று ரயில்வே சாரதிகள் சங்கத்தின் செயலாளர் சந்தன வியந்துவ தெரிவித்தார்.
முன்னர் ஒரு நாளைக்கு சுமார் 390 ரயில் பயணங்கள் இருந்தன, எனினும் இன்று அது 340 பயணங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
தேவைப்படும் 458 ரயில் சாரதிகளில் , தற்போது 220 பேர் மட்டுமே இருப்பதாகவும், அதன்படி, 238 சாரதிகள் பற்றாக்குறையாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
ஆண்டுதோறும் சாரதிகள் ரயில்வே சேவையில் இணைக்கப்பட வேண்டும் என்றாலும், 2005ஆம் ஆண்டுக்குப் பின்னர் கடைசியாக புதிய ஆட்சேர்ப்பு 2017ஆம் ஆண்டில் நடந்ததாகவும் அவர் கூறினார்.
இதற்கு தற்காலிக தீர்வுகளைத் தேடுவதால், எதிர்காலத்தில் மேம்பட்ட ரயில் சேவையை எதிர்பார்க்க முடியாது என்று ரயில்வே சாரதிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
ரயில் சாரதிகள் சேவையில் இணைக்கப்படும் ஒருவர் மூன்று வருட பயிற்சியை முடிக்க வேண்டும் என்பதால், இந்த ஆண்டு ஆட்சேர்ப்பு நடத்தப்பட்டாலும், பயிற்சி முடிந்து அந்த நபர் பணியில் சேர்க்கப்படுவதற்கு 2029ஆம் ஆண்டு ஆகும் என்றும் சாரதிகள் சங்கம் கூறுகிறது.