
இலங்கையில் நாள் ஒன்றுக்கு 40 பேர் புற்றுநோயால் மரணம்!
இலங்கையில் ஒவ்வொரு நாளும் சுமார் 100 புதிய புற்றுநோயாளர்கள் பதிவு செய்யப்படுதாகவும், நாள் ஒன்றுக்கு 40 பேர் புற்றுநோயால் உயிரிழப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் தரவுகள் இதனை தெரிவித்துள்ளன.
பெப்ரவரி நான்காம் திகதி உலக புற்றுநோய் தினத்தைக் குறிக்கும் வகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய சமூக வைத்திய நிபுணர் வைத்தியர் ஹசரேலி பெர்னாண்டோ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த புள்ளிவிவரங்கள் 2022 தேசிய புற்றுநோய் பதிவேட்டை அடிப்படையாகக் கொண்டவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2022 ஆம் ஆண்டில் 35,855 புதிய புற்றுநோயாளர்கள் பதிவாகியிருந்தனர். அதே நேரத்தில் 2021 ஆம் ஆண்டில் 14,986 புற்றுநோய் தொடர்பான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய தரவுகளின்படி, 19,500 பெண்கள் மற்றும் 16,400 ஆண்கள் புற்றுநோயாள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தரவுகளின்படி, ஆண்களிடையே மிகவும் பொதுவான புற்றுநோய் வாய்வழி புற்றுநோய் ஆகும். அதே நேரத்தில் மார்பக புற்றுநோய் பெண்களிடையே மிகவும் பொதுவானது.
அடுத்ததாக மிகவும் பொதுவானது தைராய்டு புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஆகும்.
உலக சுகாதார நிறுவனம் 30-50% புற்றுநோய்களைத் தடுக்கக்கூடியவை என்று மதிப்பிட்டுள்ளதாக வைத்தியர் ஹசரேலி பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
வயது, பாலினம், குடும்ப வரலாறு மற்றும் மரபியல் ஆகியவை புற்றுநோய்க்கான முக்கிய ஆபத்து காரணிகளாகும்.
அதிகரித்த மரபணு மாற்றங்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் காரணிகளுக்கு நீண்டகாலமாக வெளிப்படுதல் காரணமாக இலங்கையில் புற்றுநோய் விகிதம் அதிகரிப்பதற்கு பங்களிக்கிறது என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
