300 ஆண்டுகால சாதிப் பாகுபாடு முடிவுக்கு வந்தது : முதல் முறையாக கோயிலுக்குள் நுழைந்த தலித்துகள்

300 ஆண்டுகால சாதிப் பாகுபாடு முடிவுக்கு வந்தது : முதல் முறையாக கோயிலுக்குள் நுழைந்த தலித்துகள்

மேற்கு வங்காளத்தின் கிராமப்புறப் பகுதியில் சுமார் மூன்று நூற்றாண்டுகளாக நடைமுறையில் இருந்த சாதி அடிப்படையிலான பாகுபாட்டின் தளைகளை உடைத்து, 130 தலித் குடும்பங்களின் பிரதிநிதிகள் புதன்கிழமை முதல் முறையாக பூர்பா பர்தமான் மாவட்டத்தில் உள்ள கிதேஷ்வர் சிவன் கோயிலுக்குள் காலடி எடுத்து வைத்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

கட்வா துணைப்பிரிவில் உள்ள கித்கிராம் கிராமத்தின் தஸ்பாரா பகுதியைச் சேர்ந்த தாஸ் குடும்பங்களைச் சேர்ந்த ஐந்து பேர் கொண்ட குழு (நான்கு பெண்கள் மற்றும் ஒரு ஆண்) காலை 10 மணியளவில் கோவில் படிகளில் ஏறி, சிவலிங்கத்தின் மீது பால் மற்றும் தண்ணீரை ஊற்றி, தடையின்றி பிரார்த்தனை செய்தனர்.

உள்ளூர் நிர்வாக அதிகாரிகள் மற்றும் உள்ளூர் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பணியாளர்கள் முன்னிலையில், எந்தவொரு சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினைகளைகளும் ஏற்படாத வகையில் மிகுந்த பாதுகாப்பிற்கு மத்தியில் வழிபாடுகள் செய்தனர்.

‘தாஸ்’ குடும்பப்பெயர்களைக் கொண்ட தலித் குடும்பங்கள், சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டதாகக் கருதப்படும் கிதேஷ்வர் சிவன் கோயிலில் வழிபடுவதற்கான அடிப்படைப் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி 26ஆம் திகதி மகா சிவராத்திரி விழாவின் போது பாரம்பரியத்தை மீறி கோவிலில் பிரார்த்தனை செய்ய திட்டமிட்டிருந்த குடும்பங்கள், “தாழ்ந்த சாதி”யைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்தால் கோவில் வளாகத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

இதனையடுத்து கோவிலில் வழிபடுவதற்கான தங்கள் உரிமைய நிறைவேற்ற உள்ளூர் நிர்வாகம் மற்றும் பொலிஸாரின் உதவியை நாடியதைத் தொடர்ந்து, கிராமவாசிகளில் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியினரிடமிருந்து பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டதையும் எதிர்கொண்டனர்.

“கோவிலில் பூஜை செய்யும் உரிமை எங்களுக்கு வழங்கப்பட்டதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். அனைவரின் நலனுக்காகவும் கடவுளிடம் பிரார்த்தனை செய்தேன்,” என்று கோவில் படிகளில் கால் வைக்க தடை விதிக்கப்பட்ட கிராமவாசி சந்தோஷ் தாஸ் கூறினார்.

“உள்ளூர் பொலிஸார் மற்றும் நிர்வாகத்திடமிருந்து எங்களுக்கு மிகப்பெரிய ஆதரவு கிடைத்தது, அவர்கள் மீது நாங்கள் நம்பிக்கை வைத்திருந்தோம்,” என்று மற்றொரு கிராமவாசி எக்கோரி தாஸ் மேலும் கூறினார்.

கிராமத்திலிருந்து பொருளாதார ரீதியாக விலக்கு அளிக்கும் ஒரு வழிமுறையாக கடந்த சில நாட்களாக தாஸ் குடும்பங்களிலிருந்து பால் கொள்முதல் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டு, புதன்கிழமை காலை வரை அமலில் இருந்ததை கிராம மக்கள் உறுதிப்படுத்தினர்.

“எங்களுக்குச் சொந்தமான வளர்ப்பு கால்நடைகளிடமிருந்து பால் சேகரிக்கத் தொடங்குமாறு பால் கொள்முதல் மையங்களுக்கு பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர்.

இன்று மாலைக்குள் சேகரிப்பு மீண்டும் தொடங்கவில்லை என்றால், நாங்கள் அதிகாரிகளிடம் புகார் அளிக்க வேண்டியிருக்கும்” என்று எக்கோரி தெரிவித்திருந்தார்.

“கித்கிராமில் உள்ள கோவிலில் வழிபாடு தொடர்பாக இருந்த பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது. அந்த கிராமத்தில் உள்ள தஸ்பராவில் வசிப்பவர்களும் மற்றவர்களைப் போலவே பூஜை செய்ய முடியும்.

புதன்கிழமை முதல், அனைவரும் கோவிலில் பூஜை செய்வார்கள். இந்த முடிவை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்,” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Share This