வெனிசுலா உடன் வணிகம் செய்தால் 25% வரி – டிரம்பின் புது அதிரடி ; இந்தியாவை பாதிக்குமா?

வெனிசுலா உடன் வணிகம் செய்தால் 25% வரி – டிரம்பின் புது அதிரடி ; இந்தியாவை பாதிக்குமா?

ஏப்ரல் 2 முதல் வெனிசுலாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி வணிகம் செய்யும் நாடுகளின் ஏற்றுமதி,இறக்குமதி பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார். இது இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

இதுகுறித்து டிரம்ப் தனது சமூகவலைதள பக்கத்தில், வெனிசுலா நாடு அமெரிக்காவிற்கு, அதன் சுதந்திரத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. அதனால், எந்த நாடு வெனிசுலா நாட்டில் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்குகிறதோ, அந்த நாடு அமெரிக்காவுடன் வணிகம் செய்யும்போது 25 சதவிகித வரி விதிக்கப்படும். வெனிசுலா நாட்டின் மீது அமெரிக்கா 2-ம் நிலை வரியை விதிக்கிறது என்றும், இந்த வரி விதிப்பு ஏப்ரல் 2, 2025 முதல் அமலுக்கு வரும். அந்த நாள் அமெரிக்காவின் ‘விடுதலை நாள்’ ஆகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பைனான்சியல் டைம்ஸ் செய்தியின்படி , வெனிசுலா உடன் கச்சா எண்ணெய் வாங்குபவர்கள் மீது 25% வரி கூடுதலாக விதிக்கப்படும் என்று டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார்.”வெனிசுலா எண்ணெயை இறக்குமதி செய்த கடைசி தேதிக்குப் பிறகு” ஒரு வருடம் வரி விதிப்பு அமலில் இருக்கும் என்று FT அறிக்கை தெரிவித்துள்ளது. வெனிசுலா எண்ணெய் துறை மீதான தடைகளை அமெரிக்கா தற்காலிகமாக தளர்த்தியதால், 3 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு, டிச.2023-ல் இந்தியா வெனிசுலாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை மீண்டும் தொடங்கியது.

இந்தியாவிற்கு பாதிப்பு என்ன?

உலகின் 3வது பெரிய கச்சா எண்ணெய் நுகர்வோரான இந்தியா அதன் தேவைகளில் 85 சதவீதத்திற்கும் மேலாக இறக்குமதியை நம்பியுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முதல் இடத்தை பிடித்துள்ளது.

கடந்த ஆண்டு மட்டும், இந்தியா வெனிசுலாவிடம் இருந்து 22 மில்லியன் பேரல் எண்ணெய் வாங்கியுள்ளது. இது இந்தியாவின் மொத்த எண்ணெய் கொள்முதலில் 1.5 சதவிகிதம் ஆகும். ஜனவரி மாதத்தில் இந்தியா ஒரு நாளைக்கு 65,000 பீப்பாய்கள் (bpd) வெனிசுலா கச்சா எண்ணெயையும், பிப்ரவரியில் 93,000 பீப்பாய்களையும் இறக்குமதி செய்ததாக, Kpler இலிருந்து பெறப்பட்ட பொருட்கள் சந்தை பகுப்பாய்வு தரவுகள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே, வரும் ஏப்ரல் 2-ம் திகதி முதல், இந்தியாவின் மீது பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் கூறியிருந்த நிலையில், வெனிசுலா உடன் இந்தியா இந்த இறக்குமதிகளை தொடர்ந்தால் கூடுதலாக 25 சதவிகித வரி விதிக்கப்படும்.

வெனிசுலா கச்சா எண்ணெய் மீதான கூடுதல் கட்டுப்பாடுகள் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும், இது விலையேற்றத்துக்கு வழிவகுக்கும். PPAC கணிப்புகளின்படி, இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் நுகர்வு 2026 நிதியாண்டில் 4.7 சதவீதம் அதிகரித்து 252.93 மில்லியன் டன்களை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Share This