காசாவில் மூன்று நாட்களில் 21 சிறுவர்கள் உணவின்றி உயிரிழப்பு: ஐ.நா

காசாவில் மூன்றே நாட்களில் 21 சிறுவர்கள் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக பலியானதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் தீவிர இராணுவ நடவடிக்கை காரணமாக பாலஸ்தீனத்தின் காசாவில் உணவு பற்றாக்குறை மற்றும் மனித அத்துமீறில்கள் அரங்கேறுவது தொடர்கிறது.
‘தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்’ என்றார் பாரதி. ஆனால், இராணுவ நடவடிக்கை காரணமாக உறவு, உடமை என அனைத்தையும் இழந்து நிற்கும் காசா வாழ் மக்களுக்கு உண்ண முறையான உணவு கூட கிடைப்பதில்லை. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒரே நாளில் 81 பேர் உயிரிழந்தனர். அதில் 31 பேர் உதவி தேடி சென்றவர்கள். இதை மத்திய கிழக்கு பகுதியில் பிரபலமாக உள்ள செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான மோதல் கடந்த 2023-ல் அக்டோபர் 7-ம் திகதி தொடங்கியது. அன்று முதல் ஜூலை 22, 2025 வரையில் இந்த மோதலில் சுமார் 59,106 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்டுள்ளது.
இந்த சூழலில்தான் காசாவில் பட்டினி காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக நஸர் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
உதவி மையங்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து காசாவில் களப்பணியில் உள்ள பத்திரிகையாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்தனர். காசாவுக்கு தேவையான உதவிகளை வழங்கும் வகையில் பிரத்யேக சிறப்பு வழித்தடத்தை ஏற்படுத்தும் வகையில் கத்தாரில் ‘இஸ்ரேல் – ஹமாஸ்’ இடையே பேச்சுவார்த்தை நடத்தவும் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.
காசாவில் சுமார் 20 இலட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். மோதல் காரணமாக அங்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதே நேரத்தில் உதவி முகாம்களை மக்கள் அணுக முயற்சிக்கும் போது அவர்கள் இஸ்ரே தாக்குதலால் கொல்லப்படுகின்றனர். மொத்தத்தில் காசா பகுதி பூலோக நரகமாக மனிதர்களுக்கு மாறியுள்ளது.
இந்நிலையில், காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல்-ஷிஃபாவின் இயக்குனர் முகமது அபு சால்மியா, “காசாவில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டினியால் 72 மணி நேரத்தில் 21 குழந்தைகள் இறந்துள்ளனர்” என தெரிவித்தார். காசாவில் உள்ள உலக சுகாதார மையத்தின் அமைப்புகளை இஸ்ரேல் தாக்கியுள்ளது. இதில் சுமார் 15 பேர் உயிரிழந்ததாக களத்தில் இருந்து வரும் தகவல்கள் உறுதி செய்துள்ளன.
வெடிகுண்டு சப்தம், குண்டுவெடிப்பு, நெருப்பு, புழுதி, புகை, தாக்குதலில் அங்கும் இங்கும் சிதறிக்கிடக்கும் மனித உடல்களின் பாகங்களுக்கு மத்தியில்தான் தங்களது குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருவதாக காசாவில் முகாம்களில் தஞ்சம் புகுந்த மக்கள் தங்களது வாழ்க்கை சூழலை பகிர்ந்துள்ளனர். மக்கள் தஞ்சம் அடைந்துள்ள முகாம்கள், வசித்து வரும் கூடாரங்கள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்துகிறது.
காசாவில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டினியால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். “பூமியில் நரகம் என ஒன்றிருந்தால் அது காசாவில் உள்ள குழந்தைகளின் வாழ்க்கை தான்” என கடந்த 2021-ல் அன்டோனியோ குட்டெரெஸ் கூறியிருந்தார். இப்போது அந்த நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. வேறு எந்த மாற்றமும் அங்கு ஏற்படவில்லை.
பத்திரிகையாளரின் அனுபவம்: காசாவில் வசித்து வரும் அல் ஜசீராவின் பத்திரிகையாளர் மரம் ஹுமைத் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். தனது குடும்பத்துடன் அவர் காசாவில் உள்ளார். “பசியை விட உரத்த குரல் எதுவும் இல்லை என்ற சொலவடை உண்டு. எங்கள் வாழ்க்கை ஒவ்வொரு நாளும் வலி நிறைந்த சூழலாக கடக்கிறது.
ராணுவ தாக்குதல்களை விட பசி மிகவும் பயங்கரமானது. இதை நான் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை. இந்த முடிவில்லா போரில் இது மிகவும் கொடூரமானது. எனது குடும்பத்துக்கு கடந்த நான்கு மாதமாக ஒரே ஒரு ஃபுல் மீல் கூட கிடைக்கவில்லை. எங்களது வாழ்க்கை பசியை சுற்றி உள்ளது. எனது சகோதரருக்கு அது கூட கிடைப்பதில்லை. சில நேரங்களில் குழந்தைகளுக்கு கூட உணவு கிடைப்பது இல்லை.
மக்களிடம் பணம் இருந்தாலும் அதை கொண்டு எதுவும் வாங்க முடியவில்லை. என்ன நடக்கிறது என்று புரியவில்லை. இங்கு கடும் உணவு பஞ்சம் நிலவுகிறது. மறுபக்கம் உலகின் மனிதம் குறித்து பெருமையாக பேசி வருகின்றனர்” என்றார்.