2024 மீள் பார்வை : பாலிஸ்டிக் மிஸைல் முதல் அணு ஆயுதம் வரை – மூன்றாவது வருடத்தை எட்டும் ரஷியா – உக்ரைன் போர்

2024 மீள் பார்வை : பாலிஸ்டிக் மிஸைல் முதல் அணு ஆயுதம் வரை –  மூன்றாவது வருடத்தை எட்டும் ரஷியா – உக்ரைன் போர்

ஐரோப்பா மற்றும் அமெரிக்கா அங்கம் வகிக்கும் நேட்டோ கூட்டமைப்பில் சேர உக்ரைன் முயற்சி மேற்கொண்டது. இது நடந்தால் தங்கள் நாட்டுக்கு மேற்கத்திய நாடுகளால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால் ரஷியா அண்டை நாடான உக்ரைன் மீது கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷியா போர் தொடுத்தது.

மேற்கு நாடுகள் vs ரஷியா

இந்த போர் இரண்டு ஆண்டுகளை கடந்ததும் எந்த தீர்வும் எட்டப்படாமல் தொடர்ந்து வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கு நாடுகள் பண பலம், ஆயுத பலம், இராணுவ பலத்தை கொடுத்து வருகிறது. குறிப்பாக அமெரிக்கா ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு அதிக உதவிகளை செய்து வருகிறது.

நேட்டோ நாடுகளுடன் உக்ரைனை சேர்த்துக்கொள்வதே போருக்கு தீர்வு என உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

மறுபுறம் உக்ரைனுக்கு உதவுவது ரஷியாவை நேரடியாக மேற்கு நாடுகள் எதிர்ப்பதாகவே பொருள்படும் என ரஷிய ஜனாதிபதி புதின் மிரட்டல் விடுத்து வருகிறார்.

போர்

போர் தொடங்கியதிலிருந்து 43,000 உக்ரைன் வீரர்கள் உயிரிழந்துள்ளதாக ஜெலன்ஸ்கி இந்த மாத தொடக்கத்தில் தெரிவித்தார். மேலும் 6.5 இலட்சம் ரஷிய வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த 2 வருடங்களில் போரில் ரஷியாவின் கைகளே ஓங்கி இருந்த நிலையில் இந்த வருடம் உக்ரைன் தற்காத்துக் கொள்வதோடு நிறுத்திவிடாமல் ரஷிய பகுதிகளின் மேல் தாக்குதல்களை நடத்தியது இந்த 2 வருட போரை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சென்றது. கடந்த ஏப்ரல் தொடங்கி ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் உக்ரைன் மீது டிரோன் தாக்குதலை ரஷியா தீவிரப்படுத்தியது.

உக்ரைனின் மின் உள்கட்டமைப்பு உள்ளிட்ட தளங்களைக் குறிவைக்க ரஷியா தலைப்பட்டது. கடந்த ஜூலை மாத தொடக்கத்தில் பிரதமர் மோடி ரஷியா சென்றிருந்த சமயத்தில் உக்ரைன் தலைநகர் கீவ் -இல் நாட்டிலேயே மிகப்பெரிய குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷியா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலில் 20 க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

மாறிய காட்சி

இந்த தடுமாற்றங்களுக்கு இடையில் உக்ரைன் படைகள் யாரும் எதிர்பாராத விதமாக ஆகஸ்ட் 6 ஆம் திகதி முதல்முறையாக ரஷியாவுக்குள் ஊடுருவித் தாக்குதல் நடத்தின. இந்த எதிர்பாராத தாக்குதலில் ரஷியாவின் கூர்க்ஸ் பிராந்தியத்தின் பெரும்பகுதி உக்ரைன் படைகள் கட்டுப்பாட்டுக்குச் சென்றது. 200,000 ரஷிய மக்கள் அங்கிருந்து வெளியேறினர்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ரஷிய மண்ணில் வெளிநாட்டுப் படைகள் முன்னெடுத்த மிகப்பெரிய தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் இறுதியில் ரஷியாவில் 100 குடியேற்றப் பகுதிகளைக் கைப்பற்றி 600 ரஷிய வீரர்களை கைது செய்ததாக உக்ரைன் கூறியது. எல்லையில் ரஷியா முன்னேறாமல் இருக்கவே அந்த பிராந்தியங்களைக் கைப்பற்றியதாக உக்ரைன் தெரிவித்தது.

பதிலடியாக ஆகஸ்ட் 26 ஆம்  திகதி 2 கட்டங்களாக உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷிய இராணுவம் டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. இதற்கு பதிலடியாக ரஷியாவின் சராதோவ் [Saratov] பகுதியில் உக்ரைன் டிரோன்களை ஏவி சரமாரியாகத் தாக்குதல் நடத்தியது.

இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி சர்வதேச கவனம் பெற்றன. எனவே ரஷியாவுக்கு சவாலாக உக்ரைன் போர் மாறியது. அன்று முதலே இரு தரப்பும் ஒரே பலத்துடன் போரிட்டு வருகிறது.

வடகொரிய நட்பு

இந்த நிலையில் போரின் முக்கிய திருப்பமாக ரஷியாவுக்கு வட கொரியாவின் நட்புறவு கிடைத்தது. இரு நாட்டு தலைவர்களும் தத்தமது நாட்டுக்கு ஒருவரை ஒருவர் அழைத்து உபசரித்துப் பாதுகாப்பு உதவிகளைப் பரிமாற்றம் செய்துகொள்ள ஒப்பந்தம் இட்டனர்.

உக்ரைன் மீது போர் தொடுத்ததால் ரஷியா மீது மேற்கு நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்திருந்த நிலையில் வட கொரியா, சீனா, இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நட்பை புதின் அதிகம் நாடினார்.

கடந்த அக்டோபரில் போரில் ரஷியாவுடன் 12 வட கொரிய வீரர்களும் இணைந்து உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதாக ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டினார்.

சமீபத்தில் பாஷை புரியாமல் ரஷிய வீரர்கள் சிலரை வடகொரிய வீரர்கள் தவறாக சுட்டுக்கொன்ற சம்பவமும் நிகழ்ந்தது.

திடீர் அனுமதி முன்னதாக நவம்பர் 5 ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்ற பின்னர் ஜோ பைடன் நிர்வாகம் அவசர அவசரமாக ஒரு விடயத்தை செய்தது போரின் தீவிரத்தை மேலும் அதிகப்படுத்தியது.

அமெரிக்கா தான் வழங்கியிருந்த ATACMS [பால்சிடிக் ஏவுகணைகளை] கண்டம் விட்டு கண்டம் தாவும் நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்த உக்ரைனுக்கு முதல் முறையாக அனுமதி கொடுத்தது.

சற்றும் தாமதிக்காத உக்ரைன் கடந்த நவம்பர் 20 ஆம் திகதி அதாவது போர் தொடங்கி 1000 வது நாளில் ரஷியாவின் பிரையன்ஸ்க் பகுதி ராணுவ தளங்களை குறிவைத்து பால்சிடிக் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் சேதங்கள் ஏற்படவில்லை என்றாலும் ரஷியாவை இது மேலும் சீண்டியது.

அதே நாளில் 120 ஏவுகணைகள், 90 டிரோன்கள் மூலம் உக்ரைன் மின் உற்பத்தியை சீர்குழைக்க ரஷியா சரமாரி தாக்குதல் நடத்தியது. மேலும் ரஷிய அணு ஆயுத கொள்கைகளில் புதின் மாற்றம் ஒன்றைக் கொண்டு வந்தார்.

அணு ஆயுத கொள்கை

இந்த கொள்கைப்படி, அணு ஆயுதம் கொண்ட ஒரு நாடு, ரஷியாவின் மீது ஏதேனும் ஒரு வகையில் தாக்குதல் நடத்தினால் கூட, அதற்கு அணு ஆயுதங்கள் மூலம் பதிலடி கொடுக்க இந்த புதிய கொள்கை வழிவகை செய்கிறது.

இதன்மூலம் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளை தங்களின் நேரடி எதிரியாக அறிவித்து அவர்கள் மீது அணு ஆயுத தாக்குதலுக்கு புதின் எந்த நேரமும் உத்தரவிடக் கூடும் என்ற பதற்றமும் நிலவுகிறது.

இகோர் கிரில்லோவ் கொலை

இதற்கிடையே கடந்த செய்வ்வாய்கிழமை ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடந்த குண்டுவெடிப்பில் ரஷிய இராணுவத்தின் ரசாயன, உயிரியல் மற்றும் கதிர்வீச்சு பாதுகாப்புப் படைகளுக்கு தலைமை தாங்கிய இகோர் கிரில்லோவ் கொல்லப்பட்டார்.

குடியிருப்புக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த மின்சார ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டு ரிமோட் மூலம் வெடிக்கச் செய்யப்பட்டதில் இகோரும் அவரது உதவியாளரும் உயிரிழந்தனர்.

இதற்கு பழிவாங்க ரஷியா சூளுரைத்துள்ள நிலையில் நிலைமையில் டிரம்ப் சொன்ன கருத்தால் திடீர் மாற்றமும் ஏற்பட்டுள்ளது. ரஷியாவுக்கு எதிராக அமெரிக்க ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்துவது பைத்தியக்காரத்தனம் என்று அடுத்த மாதம் அதிபர் பதவி ஏற்க உள்ள டொனால்டு டிரம்ப் கூறினார்.

இதன் எதிரொலியாக உக்ரைன் விவகாரத்தில் டிரம்ப் உடன் பேச தயாராக உள்ளேன் என ஜனாதிபதி புதின் கூறியதாக ரஷிய ஜனாதிபதி  மாளிகை வட்டாரங்களில் இருந்து நேற்று தகவல் வந்திருக்கிறது.

 

Share This