திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழில் அனுஷ்டிப்பு
திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை (02.01.2025) மாலை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்.கொக்குவிலில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
மூத்த போராளி பொன் மாஸ்டர் தலைமையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் வலிகாமம் வடக்குப் பிரதேச அமைப்பாளர் ச.செல்லகாந்தன் நினைவுச் சுடர் ஏற்றினார். அதனைத் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்ட மாணவர்களையும், யுத்தத்தில் உயிரிழந்த அனைத்துத் தமிழ்மக்களையும் நினைந்து ஒருநிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் உருவப்படங்களுக்கு மலர்மாலை அணிவித்து அதனைத் தொடர்ந்து மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. நினைவுரையை மூத்த எழுத்தாளர் மு.ஈழத்தமிழ்மணி வழங்கினார்.
இந்நினைவேந்தல் நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.