
1750 ரூபா சம்பள உயர்வு – குறைப்பாடுகள் உள்ளதாக அரசாங்கத்துக்கு ஜீவன் விளக்கம்
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள சம்பள உயர்வு குறித்த அறிவித்தலை அரசாங்கம் உடனடியாக வர்த்தமானியில் வெளியிட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
2026ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தின் ஊடாக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 400 ரூபா சம்பள அதிகரிப்பு இடம்பெற்றது. இதில் அரசாங்கம் 200 ரூபாவும், நிறுவனங்கள் 200 ரூபாவும் வழங்குவதாக கூறப்பட்டது.
இதுதொடர்பில் சில தெளிவுபடுத்தல்கள் அவசியமாக உள்ளது. பெருந்தோட்ட நிறுவனங்கள் இந்த சம்பள அதிகரிப்பு குறித்து தமது கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களுக்கு இதுவரை எவ்வித சுற்று நிரூபங்களும் அனுப்பவில்லை. ஆகவே, சுற்று நிரூபத்தை அனுப்ப உத்தரவிடுமாறு கோருகிறோம்.
18 கிலோ கொழுந்து தினமும் தொழிலாளர்கள் எடுக்கின்றனர். இது 22 கிலோவாக மாறக் கூடாது. ஞாயிற்றுக்கிழமை 1 1ஃ2 பேர் வழங்கும் முறையை நீக்க கூடாது.
சம்பள அதிகரிப்புக்கு எவ்வித நிபந்தனையும் இல்லை என அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதியளித்திருந்தார்.
1750 ரூபா என்ற சம்பள அதிகரிப்பை வர்த்தமானி ஊடாக வெளியிட வேண்டும். அவ்வாறு வெளியிட்டால் பெருந்தோட்ட நிறுவனங்கள் கட்டுப்படுத்த முடியும்.
சம்பள நிர்ணய சபை கூட்டப்பட்டு இந்த விடயத்தை அரசாங்கம் உடனடியாக செய்ய வேண்டும்.
பெருந்தோட்ட நிறுவனங்கள் நட்டத்தை மாத்திரமே காண்பிக்கின்றன. இலாபத்தை காட்டவில்லை. கேகாலை, களுத்துறை உட்பட பல்வேறு மாவட்டங்களில் தொழிலாளர்களை அவுட் குரோவர் முறைக்கு மாற்றும் செயல்பாட்டில் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
இது தொழிலாளர்களை ஏமாற்றும் செயல்பாடாகும். அதனால் அவுட் குரோவர் முறை குறித்து ஒரு பொறிமுறையை அரசாங்கம் உருவாக்க வேண்டும் எனவும் ஜீவன் தொண்டமான் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.
