சட்டப்பூர்வமாக சேவையை இராஜினாமா செய்யாத 1,700 முப்படை உறுப்பினர்கள் கைது

சட்டப்பூர்வமாக சேவையை இராஜினாமா செய்யாமல், பணிக்கு வருகைத்தராத முப்படைகளைச் சேர்ந்த சுமார் 1,700 பேர் ஒரு மாத காலப்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டப்பூர்வமாக சேவையை இராஜினாமா செய்யாமல் சேவையிலிருந்து தப்பியோடிய முப்படை அதிகாரிகளைக் கைது செய்யும் நடவடிக்கை கடந்த பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
அதன்படி, பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி முதல் நேற்று (20) வரையில், முப்படையினரால் 1531 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இலங்கை பொலிஸார் நடத்திய சோதனை நடவடிக்கைகளில் 165 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெப்ரவரி மாதத்தில் சேவையிலிருந்து தப்பியோடிய 75 முப்படையினரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் இம்மாதத்தில் கடந்த சில தினங்களில் 90 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் இராணுவ வீரர்கள் என்றும், 1347 இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், தற்போது இந்த நபர்களைக் கைது செய்யும் நடவடிக்கை மட்டுமே நடைபெற்று வருவதாகவும், அவர்களுக்கு எதிராக எடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து எதிர்காலத்தில் தீர்மானிக்கப்படும் என்றும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.