
கர்நாடகாவில் பேருந்து தீப்பிடித்து 20 பேர் உடல் கருகி பலி
கர்நாடக மாநிலத்தில் இன்று (25) அதிகாலை இடம்பெற்ற பயங்கரமான பேருந்து விபத்தில், பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் சுமார் 20 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பலர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பெங்களூருவிலிருந்து கோகர்ணா நோக்கிச் சென்றுகொண்டிருந்த தனியார் சொகுசுப் பேருந்து , சித்ரதுர்கா மாவட்டம் ஹிரியூர் அருகே தேசிய நெடுஞ்சாலை 48-ல் சென்று கொண்டிருந்தது.
இன்று அதிகாலை சுமார் 2.00 மணியளவில், எதிர் திசையில் வந்த கொள்கலன் லொறி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, வீடித் தடுப்பைத் தாண்டி வந்து பேருந்தின் மீது பயங்கரமாக மோதியது.
லொறி மோதிய வேகத்தில் பேருந்தின் எரிபொருள் தாங்கி வெடித்துச் சிதறியதால், பேருந்து உடனடியாகத் தீப்பற்றியது. பேருந்து முழுவதும் தீ மளமளவெனப் பரவியதால், ஆழ்ந்த உறக்கத்திலிருந்த பயணிகளால் உடனடியாக வெளியேற முடியவில்லை. இதனால் பலர் தீயில் சிக்கி உடல் கருகினர்.
இந்த விபத்தில் இதுவரை 20 பேர் உயிரிழந்திருக்கலாம் என ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்துள்ளன.
தீக்காயமடைந்த மற்றும் படுகாயமடைந்த சுமார் 12-க்கும் மேற்பட்ட பயணிகள் மீட்கப்பட்டு, சித்ரதுர்கா மற்றும் துமகூரு மாவட்ட வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் பொலிஸார், நீண்ட நேரம் போராடி தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். லொறி ஓட்டுநரும் விபத்தில் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சித்ரதுர்கா பொலிஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கிறிஸ்துமஸ் தினமான இன்று அதிகாலையில் நேர்ந்த இந்தத் துயரச் சம்பவம் கர்நாடகா மாநிலத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
