மியான்மரில் சைபர் கிரைம் முகாம்களில் சிக்கியிருந்த 13 இலங்கையர்கள் மீட்பு

மியான்மரில் உள்ள சைபர் கிரைம் முகாம்களில் வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 17 இலங்கையர்களில் மொத்தம் 13 பேர் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மீட்கப்பட்ட நபர்களில் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட 11 இளைஞர்கள் மற்றும் இரண்டு இளம் பெண்கள் அடங்குவர்.
அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், தாய்லாந்து எல்லையிலிருந்து பாங்காக்கில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு மாற்றப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எதிர்வரும் நாட்களில் அவர்கள் இலங்கைக்குத் திரும்புவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், மேலும் நான்கு இலங்கையர்கள் மியான்மரில் உள்ள தனித்தனி சைபர் கிரைம் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை விரைவில் விடுவிப்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் சமீபத்தில் தாய்லாந்து வெளியுறவு அமைச்சர் மற்றும் மியான்மரின் துணைப் பிரதமருடனான கலந்துரையாடல்களின் போது, இந்த சைபர் கிரைம் நடவடிக்கைகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்பதற்கு உதவி கோரியிருந்தார்.
இந்த இராஜதந்திர முயற்சிகளின் விளைவாக, மொத்தம் 13 நபர்கள் இப்போது மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.