ராமாயணக் காட்சிகளை வானில் காட்ட 1,100 டிரோன்கள்

உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைந்தது முதல் ஒவ்வொரு தீபாவளி பண்டிகைக்கும் அயோத்தியில் லட்சக் கணக்கில் அகல் விளக்குகள் ஏற்றப்படுகின்றன. இது உலக சாதனையாகப் பதிவாகி வருகிறது.
அந்த வகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 19-ம் திகதி 9-வது தீப உற்சவம் நடைபெற உள்ளது. இவ்விழாவை உத்தர பிரதேச அரசு சார்பில் அயோத்தியின் ராம் மனோகர் லோகியா அவத் பல்கலைக்கழகம் நடத்துகிறது.
இதில், 29 லட்சம் அகல் விளக்குகள் ஏற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதன்முலம் கடந்த ஆண்டின் சாதனை முறியடிக்கப்பட உள்ளது.
இவ்விளக்குகள் சரயு நதியின் 56 கரைகள், ராம் கீ பேடி, நகரின் இதரக் கோயில்கள் மற்றும் குடியிருப்புகளில் ஒளிர உள்ளன.
மேலும் 1,100 டிரோன்கள் வானில் தீபாவளிக்காக பறக்கவிடப்பட உள்ளன. இவற்றில் ராமாயணத்தின் காட்சிகள் ஒளிப்படங்களாக சித்தரிக்கப்பட உள்ளன.
இதுகுறித்து மாநில சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் ஜெய்வீர் சிங் கருத்து வெளியிடுகையில் “அயோத்தியின் வெறும் தீபாவளி திருநாள் விழாவாக அன்றி ஆன்மிகம், நம்பிக்கை, கலாச்சாரம் உள்ளிட்டவற்றின் மெகா விழாவாக கொண்டாடப்பட உள்ளது.
இந்த வருடமும் தீபாவளிக்கு வரும் வெளிநாட்டவர்கள் இடையே இது சர்வதேச அளவில் இந்தியாவின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும். இதைக் காண வரும் லட்சக்கணக்காக பொதுமக்களுக்காக அயோத்தியில் சிறப்பு போக்குவரத்துடன் பாதுகாப்புகளும் பலப்படுத்த உள்ளன” என்று குறிப்பிட்டார்.