வெளிநாட்டு பறவைகளைக் கொலை செய்தவர்கள் கைது
சட்டவிரோத துப்பாக்கியை பயன்படுத்தி வெளிநாட்டு பறவைகளைக் கொலை செய்த நபர்கள் கொக்கட்டிசோலை பொலிஸாரால் கடுக்காமுனைப் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதியின் கிளீன் ஸ்ரீலங்கா வேண்டுகோளின் கீழ் சட்ட நிர்வாக நடவடிக்கைகள் கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் ஒரு கட்டமாக கடுக்காமுனைப் பகுதியில் சட்டவிரோதமாக வெளிநாட்டு பறவைகளை கொலை செய்த சந்தேக நபர்கள் கொக்கட்டிச்சோலை பொலிஸாரினால் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டனர்.
காலநிலை மாற்றத்தால் இடம் பெயர்ந்து வரும் வெளிநாட்டு அரிய வகை சுற்றுலா பறவைகள் இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கு வந்து தமது வாழ்க்கையை கழிப்பது வழக்கம். இவ்வாறு இடம் பெயர்ந்து வரும் பறவைகளை சட்டவிரோதமாக கொலை செய்து வியாபாரப்படுத்தும் சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்வது நாடு பூராகவும் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில், கொக்கடிச்சோலை பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பயணித்த வாகனங்கள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில் சந்தேகத்திற்கிடமான கார் ஒன்றினுள் தடை செய்யப்பட்ட சட்டவிரோத துப்பாக்கிகளும் கொலை செய்யப்பட்ட பறவைகளும் மீட்கப்பட்டது.
தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் , இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.