வெளிநாட்டு தொலைக்காட்சி தொடர்களை பார்த்தாலோ, பகிர்ந்தாலோ வட கொரியாவில் மரண தண்டனை – ஐ.நா அறிக்கை

வெளிநாட்டு தொலைக்காட்சி தொடர்களை பார்த்தாலோ, பகிர்ந்தாலோ வட கொரியாவில் மரண தண்டனை – ஐ.நா அறிக்கை

சர்வாதிகாரத்திற்கு பெயர் போன வட கொரியாவில் அன்றாட வாழக்கை மிகவும் கடுமையான விதிமுறைகளில் ஆனது. மக்கள் எப்படி முடி வெட்ட வேண்டும் என்பது முதல் தொலைக்காட்சியில் எதை பார்க்க வேண்டும் என்பது வரை அரசு தான் தீர்மானிக்கிறது.

இதன் உச்சமாக தென் கோரியா உள்ளிட்ட வெளிநாட்டு தொலைக்காட்சி தொடர்களை பார்த்தாலோ அல்லது பகிர்ந்தாலோ மரண தண்டனை விதிக்கும் அளவுக்கு அங்கு சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன என ஐநா மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

நேற்று ஜெனீவாவில் ஐநா மனித உரிமை கவுன்சிலில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் இதுகுறித்து 14 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

2014 முதல் தற்போது வரையிலான காலகட்டத்தில் வட கொரியாவிலிருந்து உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு தப்பிச் சென்ற 300க்கும் மேற்பட்ட மக்கள் மற்றும் நேரில் கண்ட சாட்சிகள் நேர்காணல் செய்யப்பட்டு சேகரிக்கப்பட்ட விவரங்கள் மூலம் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் அரசு, மக்களின் ஒவ்வொரு இயக்கத்தையும் கண்காணிப்பதை தீவிரப்படுத்தியுள்ளதாவும், தண்டனைகள் மிகவும் கடுமையானதாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது.

அறிக்கைப்படி, 2015க்குப் பிறகு நடைமுறைக்கு வந்த புதிய சட்டங்கள் மற்றும் கொள்கைகள் குடிமக்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் அரசாங்க கட்டுப்பாட்டை அதிகரித்துள்ளது.

வட கொரியாவுக்கான மனித உரிமைகள் ஆணையர் ஜேம்ஸ் ஹீனன் கவுன்சில் கூட்டத்தில் பேசுகையில், “கோவிட்-19 காலத்துக்கு பிறகு சாதாரண மற்றும் அரசியல் குற்றங்களுக்கான மரணதண்டனைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

தென் கொரியாவின் கே-டிராமாக்கள் உட்பட வெளிநாட்டு தொலைக்காட்சித் தொடர்களை விநியோகிப்பதற்கான புதிய சட்டங்களின் கீழ், குறிப்பிடப்படாத எண்ணிக்கையிலான மக்கள் ஏற்கனவே தூக்கிலிடப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.

இருப்பினும், வட கொரிய அரசாங்கம் இந்த அறிக்கையை நிராகரித்தது. அறிக்கையை அங்கீகரித்த ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் தீர்மானத்தை எதிர்ப்பதாக அந்த நாடு தெரிவித்துள்ளது.

Share This