வடக்கு, தெற்கு மாணவர்களிடையே நட்புறவை ஏற்படுத்தும் சந்திப்பு

வடக்கு மற்றும் தெற்கு மாணவர்களிடையே நட்புறவை ஏற்படுத்தும் வகையிலான சந்திப்பொன்று நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இளவாலைச் சென் ஹென்றிஸ் கல்லூரியில் நடைபெற்றது.
வடக்கு மற்றும் தெற்கை ஒன்றிணைத்து மாணவர்களிடையே நல்லிணக்கத்தை உருவாக்கும் நோக்கத்துடன், புனர்வாழ்வு ஆணையர் ஜெனரல் மேஜர் ஜெனரல் தர்ஷன் ஹெட்டியாராச்சியின் ஆலோசனைக்கமைய இச் சந்திப்பு நடைபெற்றது.
காலி அம்பேகம ஸ்ரீ நந்தசாரா வித்தியாலயத்தைச் சேர்ந்த சிங்கள மாணவர்களை இளவாலை ஹென்றிஸ் கல்லூரி மாணவர்கள் மேள,தாள,வாத்தியங்கள் இசைக்க வரவேற்றனர். பின்னர் மாணவர்கள் ஒன்றிணைந்து கலாசார நிகழ்வுகளில் ஈடுபட்டனர். தமிழ் மற்றும் சிங்கள மாணவர்கள் ஒருவருடன் ஒருவர் உரையாடி, அன்பளிப்பு பொருட்களையும் பரிமாறிக் கொண்டனர்.
இந்நிகழ்வில் காலி அம்பேகம ஸ்ரீ நந்தசாரா வித்தியாலயத்தைச் சேர்ந்த 50 மாணவர்களும் யாழ்ப்பாணம் இளவாலை ஹென்றிஸ் கல்லூரியைச் சேர்ந்த 60 மாணவர்களும் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.