
போண்டி துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் துப்பாக்கிதாரிகள் பரந்த பயங்கரவாதக் குழுவைச் சேர்ந்தவர்கள் அல்ல
அவுஸ்திரேலியாவில் அண்மையில் இடம்பெற்ற மோசமான துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் துப்பாக்கிதாரிகள் பரந்த பயங்கரவாதக் குழுவைச் சேர்ந்தவர்கள் அல்ல என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அவர்கள் தனியாகச் செயல்பட்டதாக அவுஸ்திரேலிய மத்திய காவல்துறை ஆணையர் கிறிஸ்ஸி பாரெட் தெரிவித்துள்ளார்.
சிட்னி நகரின் போண்டி கடற்கரையில் கடந்த 14ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.
1996 ஆம் ஆண்டுக்குப் பிறகு அவுஸ்திரேலியாவின் மிக மோசமான துப்பாக்கிச் சூடு சம்பவமான இந்தத் தாக்குதலை, பயங்கரவாதச் சம்பவம் என்று காவல்துறை அறிவித்திருந்தது.
தந்தை மற்றும் மகன் இணைந்து இந்த தாக்குதலை மேற்கொண்டிருந்தனர்.
இதில் பொலிஸார் மேற்கொண்ட பதில் தாக்குதலில் 50 வயதான தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 24 வயதான மகன் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், தாக்குதலுக்கு முன்னர் குறித்த இருவரும் பிலிப்பைன்ஸுக்கு பயணம் செய்ததை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
நவம்பர் முதலாம் திகதி பிலிப்பைன்ஸ் சென்ற அவர்கள் நவம்பர் 29ஆம் திகதி சிட்னி திரும்பியுள்ளனர்.
அவர்கள் பிலிப்பைன்ஸில் தங்கியிருந்த காலப்பகுதியில் தாக்குதல் நடத்துவதற்கு பயிற்சிகள் எதையும் பெற்றுக்கொள்ளவில்லை என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பிலிப்பைன்ஸில் துப்பாக்கிதாரிகள் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் சிசிடிவி காட்சிகள் அவுஸ்திரேலிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது தகவல்களை மதிப்பாய்வு செய்து வருவதாக கிறிஸ்ஸி பாரெட் தெரிவித்துள்ளார்.
ஆரம்ப மதிப்பீடுகளில் குறித்த நபர்கள் தனியாக செயல்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விசாரணைகளின் அடிப்படையில் புதிய சான்றுகள் அல்லது தகவல்கள் வெளிவரக்கூடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
