புத்தாண்டு குறுஞ் செய்தி அனுப்ப 98 மில்லியன் செலவானதா? அரசாங்கம் விளக்கம்

புத்தாண்டு குறுஞ் செய்தி அனுப்ப 98 மில்லியன் செலவானதா? அரசாங்கம் விளக்கம்

புத்தாண்டு வாழ்த்து குறுஞ் செய்தி அனுப்பப்படாததால் அரசாங்கம் 98 மில்லியன் ரூபாவை சேமித்ததாக ஆளும்கட்சி எம்.பி நிலந்தி கோட்டஹச்சி தெரிவித்த கருத்துக்கள் பிழையானவை என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அண்மையில் அரசியல் கூட்டமொன்றில் பேசிய கோட்டஹச்சி எம்.பி, இவ்வாண்டு இலங்கை ஜனாதிபதியின் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்து குறுஞ்செய்தி அனுப்பப்படாததால் அரசாங்கம் 98 மில்லியன் ரூபாவை சேமித்துள்ளதாக கூறியிருந்தார்.

ஆனால், அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ, கோட்டஹச்சி எம்.பி குறிப்பிட்ட செலவு தவறானது எனவும், அவர் சமூக ஊடகங்களில் பரவிய அறிக்கை ஒன்றிலிருந்து இந்தத் தகவலைப் பெற்றுள்ளதாகவும் இன்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

“தேசிய மக்கள் சக்தி அரசியல் கலாசாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தவே வந்துள்ளது. எனவே, நாம் வெளியிடும் கூற்றுகளுக்கு கூடுதல் பொறுப்பு ஏற்க வேண்டும். இதில் ஏற்படும் குறைபாடுகள் தீங்கு விளைவிக்கும். இந்தத் தவறுகளைத் திருத்துவதற்கு நாம் எங்களால் முடிந்த முயற்சிகளை மேற்கொள்கிறோம்” எனவும் அவர் கூறினார்.

அரசாங்கம் பொய்யான கூற்றுகளை வெளியிடுவதாகவும், இது அதன் நம்பகத்தன்மையைப் பாதிக்கிறது என்றும் எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், இத்தகைய சம்பவங்களை அரசாங்கம் தீவிரமாக எடுத்துக்கொள்வதாகவும், அவற்றைத் திருத்துவதற்கு ஏற்கனவே தலையீடு செய்துள்ளதாகவும் பதிலளித்தார்.

ஓர், இரு அல்லது ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்கள் அல்லது கூற்றுகளை வைத்து முழு அரசாங்கமும் பொய் சொல்கிறது என்று கருத முடியாது.

இத்தகைய சந்தர்ப்பங்களில், அரசாங்கம் பொறுப்பேற்று அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்புகளில் திருத்தங்களைச் செய்யவோ அல்லது மன்னிப்பு கோரவோ கடமைப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

Share This