
பாராளுமன்ற உறுப்பினர்கள், பணிக்குழாமிற்கு நீண்ட விடுமுறை
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாராளுமன்ற ஊழியர்களுக்கும் நீண்ட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 17 நாட்கள் விடுமுறையும், பாராளுமன்ற ஊழியர்களுக்கு மேலும் இரண்டு நாட்கள் விசேட விடுமுறையும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அவசர அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்கு கொண்டுவருவதற்கான குறைநிரப்பு மதிப்பீடு நேற்றுமுன் தினம் (18) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
நேற்று இது தொடர்பான விவாதம் இடம்பெற்றதைத் தொடர்ந்து இந்த குறைநிரப்பு மதிப்பீடு அங்கீகரிக்கப்பட்டது.
அதனையடுத்து, ஜனவரி 06 ஆம் திகதி காலை 9.30 மணி வரை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் சபாநாயகரின் அனுமதியின் பேரில் பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் மேலதிக விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விசேட சுற்றறிக்கை ஒன்றின் ஊடாகவும் ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 24 மற்றும் 26 ஆகிய இரு தினங்கள் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டிருந்தன.
இதற்கமைய, பாராளுமன்ற ஊழியர்கள் மீண்டும் டிசம்பர் 29 ஆம் திகதி திங்கட்கிழமையே தமது கடமைகளுக்கு திரும்பவுள்ளனர்.
