நுவரெலியா வைத்தியசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்

நுவரெலியா அரச வைத்தியசாலையின் தாதியர் சங்கத்தினர் இன்றையதினம் நுவரெலியா வைத்தியசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.
வைத்திய ஊழியர்களுக்கான சலுகைகள் மற்றும் மேலதிக சேவைகால கொடுப்பனவு குறைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
அரசாங்கத்தின் வரவு–செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ள போதும் வைத்திய ஊழியர்களுக்கான சலுகைகள் மற்றும் மேலதிக சேவைகால கொடுப்பனவு குறைக்கப்பட்டுள்ளதாக தாதியர்கள் விசனம் வெளியிட்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த தாதியர்கள், ”எமக்கு நியாயமான தீர்வை பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுக்கிறோம். புதிதாக எமக்கு எதுவும் தேவையில்லை. ஏற்கனவே இருந்த சலுகைகளையும் கொடுப்பனவுகளையும் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.” என்றனர்.
இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தாதியர்களின் கடமைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் மதிய இடைவேளையில் மாத்திரமே முன்னெடுக்கப்பட்டது.
(க.கிஷாந்தன்