தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு: நாமல் கூறுவது என்ன?

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படுவது நல்ல விடயம். அது கட்டாயம் செய்யப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ ஆனால் இது விடயத்தில் அரசாங்கத்திடம் புதுமையான நிகழ்ச்சி நிரல்தானே உள்ளது. அதாவது தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை வழங்குவதற்காக வியாபாரிகளுக்கு அரசாங்கம் கொடுப்பனவு வழங்குகின்றது. மக்களிடம் இருந்து வரிப்பணம் அறிவிடப்படுகின்றது.
அந்த பணத்தை எடுத்து முதலாளிகளுக்கு வழங்கி சம்பளம் வழங்குமாறு கூறப்படுகின்றது.
சிறு தோட்ட உரிமையாளர்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவதற்குரிய அரசாங்கத்தின் வேலைத்திட்டம் என்ன? தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை வழங்குவதற்கு வேறு வழியை கண்டுபிடியுங்கள். நிறுவனங்களுக்கு வரிச்சலுகையை வழங்குங்கள். மாறாக மக்களிடம் வரி பணத்தை எடுத்து நிறுவனங்களுக்கு வழங்குவதில் என்ன பயன்?” – எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.
செல்வந்தர்களிடமிருந்து பெற்று ஏழைகளுக்கு வழங்கும் நிலையை மாற்றி, ஏழைகளின் வயிற்றில் அடித்து, செல்வந்தர்களுக்கு நிவாரணம் வழங்கும் நடைமுறையை அரசாங்கம் கைவிட வேண்டும் எனவும் நாமல் வலியுறுத்தினார்.
