
டக்ளஸ் தொடர்பில் சிஐடி தீவிர விசாரணை
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.
இதன்போது டக்ளஸ் தேவானந்த கைது விவகாரம் தொடர்பில் எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஆட்கொலை விசாரணைப் பிரிவாலேயே துப்பாக்கி தொடர்பில் விசாரணை நடத்தப்படுகின்றது.
டக்ளஸ் தேவானந்தாவுக்கு 2000 காலப்பகுதியில் ரி- 56 துப்பாக்கிகள் 13 மற்றும் ஆறு பிஸ்டல்கள் வழங்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன என்று மட்டுமே என்னால் குறிப்பிட முடியும்.
கம்பஹா நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.” – என்றார்.
