சொகுசு கப்பலில் பரவிய நோரோ வைரஸ் : 200 பயணிகளுக்கு நோய் பாதிப்பு

சொகுசு கப்பலில் பரவிய நோரோ வைரஸ் : 200 பயணிகளுக்கு நோய் பாதிப்பு

அமெரிக்காவில் சொகுசு கப்பலில் வைரஸ் நோய் தாக்கியதில் 200 க்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி, ஒரு சொகுசு பயணக் கப்பலில் இருந்த 200-க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் பணியாளர்களுக்கு நோரோ என்ற வைரஸ் பரவியதால் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

குனார்ட் லைன்ஸின் குயின் மேரி 2 என்று அழைக்கப்படும் சொகுசு கப்பல், இங்கிலாந்திலிருந்து கிழக்கு கரீபியனுக்குச் செல்கிறது. கப்பலில் மொத்தமாக 2,538 பயணிகளும் 1,232 பணியாளர்களும் இருந்துள்ளனர்.

அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளபடி இந்தக் கப்பலில் மொத்தமாக 224 பயணிகள் மற்றும் 17 பணியாளர்கள் வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸின் முக்கிய அறிகுறிகளாக வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்றவை இருப்பதாக தெரியவந்துள்ளது.

நோரோ வைரஸ் என்பது வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் இரைப்பைக் குடல் நோயாகும். எந்த வயதினருக்கும் இந்த வைரஸ் தொற்று ஏற்படலாம். சுகாதரமற்ற உணவு அல்லது குளிர்பானங்களை சாப்பிடுவதால் இந்த வைரஸ் பரவுகிறது.

தற்போது வடமேற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் இருக்கும் குயின் மேரி சொகுசு கப்பல், சௌத்தாம்ப்டனுக்குச் செல்லும் வழியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இது மார்ச் 8 ஆம் தேதி சௌத்தாம்ப்டனில் இருந்து புறப்பட்டு கிழக்கு கரீபியனுக்கு 29 நாள் பயணம் மேற்கொண்டு ஏப்ரல் 6 ஆம் தேதி தனது சுற்றுப்பயணத்தை முடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கப்பல் மார்ச் 15 ஆம் தேதி நியூயார்க்கில் முதல் முறையாக நிறுத்தப்பட்டது. அப்போதுதான் நோய் பரவியதாகத் தெரிய வந்திருக்கிறது. பயணிகள் வேறு அறைக்கு மாற்றப்பட்டு, கிருமி நாசினி தெளித்து நோய் பாதிக்கப்பட்ட அறைகளை சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

Share This