‘சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரி ஒருவர் ‘வழக்கு கோப்புகளை மறைத்தார்’

‘சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரி ஒருவர் ‘வழக்கு கோப்புகளை மறைத்தார்’

கடந்த காலங்களில் சில வழக்கு கோப்புகளை சட்டமா அதிபர் திணைக்களம் மறைத்த விதத்தை ஜனாதிபதி நாட்டுக்கு வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை (ஜனவரி 25) ஹோமாகம பிடிபன பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க, இவ்வாறானதொரு அரசாங்கம் வரும் வரை கோப்புகள் மறைக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்ததாக சட்ட அதிகாரி ஒருவர் தன்னிடம் தெரிவித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

“சில கோப்புகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக ஒரு சட்டத்தரணி எனக்கு குறிப்பிட்டார். அந்த நேரத்தில் அந்த கோப்பு தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்ய முனைந்திருந்தால் ஒன்று அவர் வீடு சென்றிருப்பார் அல்லது அந்த வழக்கு வெளியில் சென்றிருக்கும் எனக் குறிப்பிட்டார். ஆகவே இவ்வாறான ஒரு அரசாங்கம் வரும்வரை கோப்புகளை வைத்திருந்ததாக அவர் குறிப்பிட்டார். அவ்வாறான மனிதர்கள் இருக்கின்றனர். அவ்வாறு பணியாற்றுவதற்கு நாம் நன்றி செலுத்த வேண்டும்.”

இவ்வாறான உத்தியோகத்தர்களுக்கு தமது அரசாங்கத்தின் கீழ் கடமைகளை நிறைவேற்ற சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, எத்தனை வழக்கு ஆவணங்கள் மறைக்கப்பட்டிருந்தன? எவ்வாறான குற்றங்கள்? யாருடன் தொடர்புடையது? போன்ற விபரங்களை வெளிப்படுத்தவில்லை.

“நாங்கள் மாத்திரம்தான் சரி, ஏனைய அனைவரும்… அவ்வாறு அல்ல, அவ்வாறு பொறுப்புடன் செயற்படும் மனிதர்கள் இருக்கின்றார்கள் இந்த நாட்டில். அவர்களுக்கு அந்த சுதந்திரத்தை வழங்குகின்றோம். வழக்குகளை நாங்கள் தெரிவு செய்வதில்லை. பெயர்களை தெரிவு செய்வதில்லை. நபர்களை தெரிவு செய்வதும் இல்லை. சரியான முறையில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு நாங்கள் நிறுவனத்திற்கு அறிவித்துள்ளோம். எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. அந்த நிறுவனத்தை பலப்படுத்துவதை நாங்கள் மீண்டும் மீண்டும் செய்கின்றோம்.”

இம்மாதம் மூன்று முக்கிய வழக்குகளை தாக்கல் செய்ய சட்டமா அதிபர் திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க, அரசாங்கம் அறிவித்துவிட்டது என்பதால் மாத்திரம் வழக்குத் தொடர முடியாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பிரதானமான 11 வழக்குகள் தொடர்பில் தகவல்களை கண்டறிந்துள்ளதாகவும், மூன்று தொடர்பில் இந்த ஜனவரி மாதம் வழக்குத் தாக்கல் செய்ய முடியுமெனவும் சட்டமா அதிபர் திணைக்களம் கடந்த நாட்களில் தெரிவித்திருந்தது. பார்ப்போம். நீதிமன்றத்திற்கு சென்று வாத விவாதங்களை செய்வது நாங்கள் அல்லவே. வாத விவாதங்களை செய்வது அரச சட்டத்தரணிகள். இந்த விசாரணைகளின் முன்னேற்றங்களின் அடிப்படையில் வழக்குத் தாக்கல் செய்ய முடியுமென அரச சட்டத்தரணிகள் திருப்தி அடைய வேண்டும். நாங்கள் சொல்வதால் வழக்குத் தாக்கல் செய்யமாட்டார்கள்.

நாங்கள் சொல்லி வழக்குத் தாக்கல் செய்வதால் பிரயோசனமும் இல்லை. அந்த வழக்குடன் தொடர்புடைய சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு சென்று இவ்வாறான ஒரு குற்றம் நிகழ்ந்துள்ளது. இதற்கு தண்டனை வழங்கப்பட வேண்டுமென உறுதிப்படுத்த வேண்டும். அதற்கு தேவையான காரணங்களை சேகரிக்க வேண்டும். அதனை செய்வோம்.

மோசடி மற்றும் ஊழல் தொடர்பில் ஆட்களை கைது செய்வதற்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் பொலிஸார் உட்பட சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களின் செயற்பாடுகளின் எவ்வகையிலும் தலையிடப்போவதில்லை எனவும் தெரிவித்தஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க, எவ்வாறெனினும், இந்த வழக்கு ஆவணங்களை மறைக்கும் விடயத்துடன் தொடர்புடைய அதிகாரிகள் அல்லது அரசியல்வாதிகள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கவில்லை

CATEGORIES
Share This