சஜித்தை டெல்லிக்கு அழைத்த மோடி

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை டெல்லிக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த வார இறுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, கொழும்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தார். இதன் போதே டெல்லி விஜயத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டது.
கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் சுமார் 30 நிமிடங்கள் வரை இடம்பெற்ற இந்த சந்திப்பில், இந்த தருணத்தில் இலங்கைக்கு எத்தகைய உதவியை இந்தியாவிடமிருந்து எதிர்பார்க்கின்றீர்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிடம் வினவியுள்ளார்.
இதற்கு பதிலளித்த சஜித் பிரேமதாச, கொவிட் பெரும் தொற்றின் போதும், அதன் பின்னரான பொருளாதார நெருக்கடியின் போதும் இந்திய உதவி கிடைத்திருக்காவிடின் இலங்கையால் இந்தளவு சீக்கிரம் மீண்டிருக்க முடியாது. எனவே, எதிர்வரும் நாட்களிலும் பொருளாதாரத்தில் இருந்து மீள்வதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பு இன்றியமையாததாகும்.
ஆகவே, இலங்கைக்கு ஆதரவாக இந்தியாவின் தொடர் ஒத்துழைப்பு அவசியம் என கோரிக்கை விடுத்தார். இதன் பின்னர் டெல்லிக்கு விஜயம் செய்யுமாறு எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அழைப்பு விடுத்தார். சந்திப்பில் பங்கேற்றிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரிடம் விஜயத்திற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு பிரதமர் மோடி இதன்போது ஆலோசனை வழங்கினார்.