ஒரு லட்சம் டொலரை கடந்தது பிட்காயின் மதிப்பு

ஒரு லட்சம் டொலரை கடந்தது பிட்காயின் மதிப்பு

முன்னெப்போதும் இல்லாத வகையில் பிட்காயின் ஒன்றின் மதிப்பு ஒரு லட்சம் அமெரிக்க டொலர்களை கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி, பிட்காயினின் மதிப்பு 1,03,132.80 டொலராக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தை தொடர்ந்து இவ்வாறு மதிப்பு அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, பிட்காயின் விலையில் பெரும் ஏற்றம் ஏற்பட்டது. இதன்படி, கடந்த ஒரு மாதத்தில் 50.96 சதவீதம் விலை அதிகரித்துள்ளது.

ட்ரம்பின் கொள்கைகள் கிரிப்டோகரன்சிகளுக்கு நன்றாக இருக்கும் என்ற மதிப்பீட்டால் சந்தை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது, ​​ட்ரம்ப் டிஜிட்டல் சொத்துக்களை ஆதரிப்பதாக உறுதியளித்தார்.

ட்ரம்பிற்கான தேர்தல் பிரச்சாரத்தில் பல பில்லியன்களை கொட்டிய உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், கிரிப்டோகரன்ஸிகள் மீது கொண்டுள்ள ஆர்வமும் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

2016ஆம் ஆண்டு 453 டொலர்களாக இருந்த பிட்காயின் விலை தற்போது லட்சத்தை கடந்துள்ளது. 2019இல் 3802 டொலராகவும், 2020 மார்ச் மாதம் 5178 டொலராகவும் பதிவாகியிருந்தது.

எனினும், இந்த தொகை 2021 மார்ச் மாதம் 61,000 டொலருக்கு மேல் உயர்ந்தது, எனினும், பின்னர் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்தது. 16,000 டொலராக பதிவானது.

தற்போதைய விலை அதிகரிப்பின் மூலம் பிட்காயின் சந்தை மதிப்பு இரண்டு டிரிலியன் டொலராக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அடுத்த ஆண்டு (2025) பிட்காயின் மதிப்பு ஐந்து லட்சம் டொலர் வரை அதிகரிக்கும் எனவும், 2033ஆம் ஆண்டு ஒரு மில்லியன் டொாலராக உயரக்கூடும் எனவும் உலகளாவிய முதலீட்டு நிறுவனமான பெர்ன்ஸ்டீன் அதன் சமீபத்திய அறிக்கையில் கூறியுள்ளது.

Share This