இலங்கைக்கு நடந்ததுதான் மாலத்தீவுக்கு நடக்க போகுதா?

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான மாலத்தீவு மிகக் கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்துள்ளது. இலங்கை கடந்த 2022 ஆம் ஆண்டு சந்தித்தது போன்ற ஒரு திவால் நிலையை நோக்கி மாலத்தீவு செல்வதாக சொல்லப்படுகிறது. சீனாவுடனான சுதந்திரமான வர்த்தக ஒப்பந்தமே மாலத்தீவு தற்போது எதிர்கொண்டு இருக்கக் கூடிய பிரச்சினைக்கு முக்கிய காரணமாகவும் சொல்லப்படுகிறது.
இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள குட்டி தீவு நாடு மாலத்தீவு. பல தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய மாலத்தீவு நாட்டின் மொத்த மக்கள் தொகையே .. லட்சம்தான். அளவிலும் சரி, மக்கள் தொகையிலும் சரி மிகச்சிறிய நாடாகவே இருந்தாலும் அந்த நாடு அமைந்து இருக்க கூடிய மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக உள்ளது.
கடுமையான கடன் நெருக்கடியில் மாலத்தீவு
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே இந்திய பெருங்கடலில் அமைந்து இருக்கும் இந்த நாடு, இந்தியாவின் புவிசார் பாதுகாப்பு உள்ளிட்டவற்றிற்கு மிகவும் முக்கிய நாடாக உள்ளது. இந்தியாவுடன் இணக்கமாக இருந்து வந்த மாலத்தீவு கடந்த ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கு பின் சீனாவுக்கு நெருக்கமாக மாறியது. மாலத்தீவை வளைத்துபோட்டு, தங்கள் கட்டுக்குள் வைத்துக்கொள்ள திட்டமிடும் அந்த நாட்டிற்கு அதிக அளவு கடன்களை வழங்கி மாலத்தீவில் பல்வேறு திட்டங்களையும் முன்னெடுத்து வருகிறது.
மாலத்தீவை பொறுத்தவரை அந்த நாட்டிற்கு முக்கிய வருவாய் ஆதாரமே சுற்றுலாதான். கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக வீழ்ச்சியை சந்தித்ததால் மாலத்தீவு நாடு கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதனால், கடுமையான கடன் நெருக்கடியில் தற்போது மாலத்தீவு உள்ளது. அந்த நாட்டின் அன்னிய செலாவணி இருக்கும் வேகமாக குறைந்து வருவதால் என்ன செய்வது என்று விழி பிதுங்கி கொண்டு இருக்கிறது.
கடந்த 2022 ஆம் ஆண்டு இலங்கை எப்படிப்பட்ட பொருளாதார நெருக்கடியை சந்தித்ததோ அதே போன்றதொரு பொருளாதார நெருக்கடி நிலைக்கு மாலத்தீவும் சென்று கொண்டு இருப்பதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். மாலத்தீவின் தற்போதைய வெளிக்கடன் 3.4 பில்லியன் டாலராக உள்ளது. பெரும்பாலும் இந்த கடன்களை இந்தியா மற்றும் சீனாவிடமே மாலத்தீவு வாங்கியிருக்கிறது.
கடன் நெருக்கடியை சமாளிக்க சுற்றுலா பயணிகளுக்கான வரி உயர்வு, சம்பள குறைப்பு, அரசு நிறுவனங்களுக்கு சொந்தமான பங்குகளை விற்பனை செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டாலும் கூட நிதி நெருக்கடியில் இருந்து மீள இது போதுமானதாக இல்லை. சீனா வளர்ச்சி வங்கியிடம் இருந்து 200 மில்லியன் டாலர் நிதி உதவியையும் கோரியுள்ளது. அதேபோல, சீனாவிடம் கடனை செலுத்திவிட்டு மீண்டும் பெறவும் திட்டமிட்டு உதவி கோரியுள்ளது.
கடன் மட்டும் 8.2 பில்லியன் டாலராக உயர்வு
எனினும் சீனா இது பற்றி மவுனம் காத்து வருகிறது. வளைகுடா நாடுகளிடம் உதவி பெற முயன்ற போதிலும் அங்கும் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் இல்லை. கடந்த சில ஆண்டுகளாக கடனை பெற்று கதையை ஓட்டினாலும் கூட தற்போது மாலத்தீவில் மிக மோசமான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டில் 3 பில்லியன் டாலராக இருந்த மாலத்தீவு கடன் மார்ச் 2024 ல் 8.2 பில்லியனாக உயர்ந்துள்ளது.
இதே நிலை நீடித்தால் 2029 ஆம் ஆண்டுக்குள் மாலத்தீவு கடன் 11 பில்லியனை தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை மற்றும் 750 மில்லியன் டாலர் மதிப்பிலான கரன்சி ஸ்வப் ஆகியவை தற்காலிக நிவாரணம் கொடுத்தாலும் கூட மாலத்தீவின் கடன் நெருக்கடிகளுக்கு இது போதுமானதாக இருக்காது என்றே சொல்லப்படுகிறது.
இந்திய பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்தும் சீனா
மாலத்தீவிவு பொருளாதார நெருக்கடியில் மூழ்கினால் அதை வைத்து சீனா ஏதேனும் சதித்திட்டத்தினை செய்து, இந்திய பெருங்கடலில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தக் கூடும் என்ற அச்சமும் சர்வதேச நோக்கர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதனால், அடுத்தடுத்து மாலத்தீவுகளில் என்ன நடக்கப்போகிறது என்றும், இந்த விவகாரத்தை இந்தியா எப்படி கையாளும் என்பதையும் பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.