இந்தோ – பசுபிக் பிராந்தியமும் அநுரவின் காய் நகர்த்தலும்

இந்தோ – பசுபிக் பிராந்தியமும் அநுரவின் காய் நகர்த்தலும்

 

*ரில்வின் லண்டன் செல்கிறார் இந்தியாவுக்கும் பயணம் செல்வார்.

*புலம்பெயர் நாடுகளில் இளஞ்செழியனுக்கு பாராட்டு விழா! பின்னணி என்ன?

*ரணில் – மகிந்தவை விட, அநுரவின் மாறுபட்ட அணுகுமுறை

அ.நிக்ஸன்-

2009 இற்குப் பின்னரான தமிழ்த்தேசிய அரசியல் உள்ளிட்ட இலங்கைத்தீவின் ஒட்டுமொத்த செயற்பாடுகளிலும் மாறுபட்ட அணுகுமுறை ஒன்றை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கையாளுகின்றார் என்பதை, அவருடைய சமீபத்திய காய் நகர்த்தல்கள் காண்பிக்கின்றன.

அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளையும் இந்திய – சீன அரசுகளையும் கையாளும் அணுகுமுறையானது, தமது கட்சிக் கொள்கைக்கு ஏற்பவும், சர்வதேச அரசியல் – வர்த்தகம் ஆகியவற்றை பேணக்கூடிய முறையிலும் அமைந்துள்ளது.

இது ஒருவகையில் சர்வதேச இரட்டைக் கொள்கை என்று கூறினாலும், இந்தியா – அமெரிக்கா – பிரித்தானிய அரசுகளின் ஒத்துழைப்பும் – உதவிகளும் அவசியம் என்ற கோணத்தில், அநுர காய்நகர்த்துகிறார் எனலாம்.

ஜேவிபியாக அல்லாமல் தேசிய மக்கள் சக்தியாக பயணிக்க வேண்டும் என்ற அநுரவின் சற்று மாறுபட்ட கொள்கைக்கு ஜேபிவியின் அடிப்படைக் கொள்கைகளை அப்படியே தொடர்ந்து பின்பற்றும் ரில்வின் சில்வா அதற்கு ஒத்துழைப்பதாக இல்லை.

ஜேபிவியின் தேசிய சபை உறுப்பினர்களில் பலரும் ரில்வின் சில்வாவுடன் இணைந்திருக்கின்றனர். இப் பின்னணியில்தான் 2025 ஆம் ஆண்டு அநுர கையாண்ட சில நுட்பமான அணுகுமுறை காரணமாக ரில்வின் சில்வா அதனை ஏற்க வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக ஜேவிபியின் ஆரம்பகால எதிர்ப்புகளும், இந்தியாவின் விரிவுவாதக் கொள்கைகள் மீதான அதன் கடுமையான விமர்சனங்களும் இருந்தன. இருப்பினும், 2025 இல் ஜேவிபி அதன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, இந்திய அரசாங்கத்துடன் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தது. அநுரகுமார இந்த ஏற்பாட்டை செய்திருந்தார்.

2025 ஜனவரியில், ஜேவிபியின் தலைவர்கள் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களைச் சந்தித்தனர். இது அநுரவின் அரசியல் அணுகுமுறையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம.

இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களைச் சந்தித்து உரையாடிய பின்னர், இந்தோ – பசுபிக் பிராந்திய விவகாரம் உள்ளிட்ட பல விடயங்களில் இந்திய மத்திய அரசுடன் ஒத்துழைக்க முடிவு செய்தனர்.

ஆட்சியைக் கைப்பற்ற முன்னரே, 2024 ஆம் ஆண்டு முற்பகுதியில் இந்த நிலைப்பாட்டை ஜேபிவி. குறிப்பாக அநுரகுமார கையில் எடு்த்திருக்கிறார். .

இந்தியாவுடனான உறவில் 2026 ஆம் ஆண்டு மேலும் சாத்தியங்கள் அதாவது எதிர்காலத்தில் இந்தியாவுக்கும் ஜேவிபிக்கும் இடையிலான உறவுகளில் புதிய வகிபாகத்தை உருவாக்கக்கூடும்.
தன்மை தெரிகிறது.

அதேவேளை, தேசிய மக்கள் சக்தியாக அரசாங்கத்தை அமைத்திருந்தாலும், அநுர தலைமையிலான அரசாங்கத்தின் பிரதான வகிபாகம், ஜேவிபி எனப்படும் சோசலிச – இடதுசாரி தன்மை கொண்ட கட்சிக்குரியது என்பதை அநுர 2025 இல் பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தி வருகின்றார்.

இதன் காரண – காரியம் என்பது ஜேபிவியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மற்றும் அவர் தலைமையிலான தேசிய சபை உறுப்பினர்கள் அனைவரும் தொடர்ந்து தனது நிலைப்பாட்டை ஆதரிக்க வேண்டும் என்ற சிந்தனை என்று கூறலாம்.

இதனை மையமாகக் கொண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் (Communist Party of China – CPC) ஜேவிபி புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை அநுர சென்ற ஒக்ரோபர் மாதம் கைச்சாத்திட்டிருக்கிறார்.

ஜேபிவியின் தேசிய சபை உறுப்பினரான, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க சீனாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர்களுடன் உரையாடிய பின்னர் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

அநுர, ரில்வின் சில்வா ஆகியோர் சீனாவுக்கு பயணம் செய்து நடத்திய பேச்சுக்களின் தொடர்ச்சியாகவே பிமல் ரத்நாயக்க சீனாவுக்குச் சென்று இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேசத் துறைத் தலைவர் லியு ஹைக்சிங் (Liu Haixing) உள்ளிட்ட பிரதிநிதிகளுடன் உரையாடிய அமைச்சர் ரத்நாயக்க, தமது அரசாங்கத்தின் அரசியல் – பொருளாதார செயற்திட்டங்கள் பற்றி விளக்கி கூறியிருக்கிறார்.

முற்போக்கான சீர்திருத்தங்கள் மூலம் சீனாவை எப்படி சீன கம்யூனிஸ்ட் கட்சி கட்டி வளர்த்ததோ, அதேபோன்று ஒரு செயற்திறன் மிக்க நடவடிக்கைகள் ஊடாக இலங்கையை கட்டியெழுப்ப வேண்டும் என பிமல் ரத்நாயக்க சீனாவில் விபரித்திருக்கின்றார்.

ரணில், மகிந்தவை பின்பற்றி ஜேவிபியும் சீனாவுடன் அந்த உறவை பேணுவதற்கு ஏற்ப புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது என கூற முடியாது.

ஏனெனில் இந்த ஒப்பந்தம் கட்சி அரசியல் மாத்திரமல்ல, புவிசார் அரசியல் – பொருளாதார நலன்கள் என்ற பிரதான அம்சங்களையும் கொண்டுள்ளது.

ஆகவே, 2025 இல் அநுர கையாண்ட அணுகுமுறை என்பது ரணில், மகிந்த போன்ற தலைவர்களைவிடவும், முற்றிலும் மாறுபட்டது.

அதாவது புவிசார் அரசியல் விவகாரங்களில் சமாளிப்பு அரசியல் என்பதைவிடவும், இதுதான் ஜேபிவி என்பதையும், அதன் அடிப்படைக் கொள்கைகளையும் சிங்கள மக்களுக்கு வெளிப்படுத்தும் உத்திதான் இது.

குறிப்பாக வோஷிங்டன் – புதுடில்லி அநுர அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து வரும் பின்னணியில், சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஜேவிபி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டமை முற்றிலும் மாறுபட்ட உத்தி.

ஆகவே, அநுர அரசாங்கம் பதவியேற்று ஒரு வருடம் சென்றுள்ள நிலையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதான வகிபாகம் ஜேவிபி என்பதை நிரூபித்துள்ளது என்று கூறலாம்.

இப் பின்புலத்தில் கொழும்பில் உள்ள இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் என்ரூ பெட்ரிக், ஜேவிபி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவை சந்தித்து உரையாடியுள்ளார்.

சென்ற வெள்ளிக்கிழமை, கொழும்பு பத்தரமுல்ல பெலவத்தையில் உள்ள ஜேவிபியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில், அநுர அரசாங்கத்தின் செயற்பாடுகள் – பிராந்திய பாதுகாப்பு விடயங்கள் பற்றி உரையாடப்பட்டுள்ளது.

அநுர அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடு மற்றும் மேற்கு – ஐரோப்பிய நாடுகளுடன் ஒத்துழைத்துச் செற்படுவது பற்றி பிரித்தானிய அரசுடன் விரிவாக உரையாட, ரில்வின் சில்வா எதிர்வரும் 21 ஆம் திகதி தலைநகர் லண்டனுக்குச் செல்லவுள்ளார்.

இதற்கான அழைப்பை உயர்ஸ்தானிகர் என்ரூ பெட்ரிக் ரில்வின் சில்வாவிடம் நேரடியாக கையளித்துள்ளார்.

ஜேவிபியை மையப்படுத்திய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், சீனாவுடன் கூடுதல் உறவைப் பேணும் என பலராலும் எதிர்வு கூறப்பட்ட நிலையில், அமெரிக்க – இந்திய அரசுகளை மையப்படுத்தியும் பிரித்தானிய ஆதரவோடும், மேற்கு நாடுகளுடன் உறவை பேணும் அணுகுமுறையை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, மற்றொரு பக்கத்தால் பின்பற்றி வருகிறார் என்பது கண்கூடு.

ஜேவிபியின் அடிப்படைக் கொள்கையோடு செயற்பட்டு வரும் ரில்வின் சில்வா, அதற்கு ஒத்துழைக்க தயங்கிய ஒரு பின்னணியிலும், ரில்வின் சில்வா எதிர்காலத்தில் இந்த நாடுகளை விமர்சிக்காமல் இருக்கும் நோக்கிலும் லண்டன் பயணத்தை அநுரகுமார திஸாநாயக்க ஏற்பாடு செய்திருக்கிறார் என்றும் கூறலாம்.

அதேநேரம் ரில்வின் சில்வா, இந்தியாவுக்கும் பயணம் செய்யவுள்ளார்.

ஆகவே, அநுரகுமார திஸாநாயக்க தனியே இலங்கையின் ஜனாதிபதியாக அல்லாமல், இந்தோ – பசுபிக் பிராந்திய பாதுகாப்பு விடயங்களில் முன்னுக்குப் பின் முரணான அணுகுமுறை ஒன்றை கையாண்டு, இலங்கைத்தீவின் இறைமை என்ற விவகாரத்தில் மேற்கு – ஐரோப்பிய நாடுகள் மற்றும் சீன – இந்திய அரசுகள் என்பதை மிக நுட்பமாக கையாளுகிறார்.

இலங்கையின் தேசிய தலைமை என்ற அங்கீகாரத்தை நோக்கி அவர் பயணிக்கிறார்.

ஆனால், ஈழத்தமிழர் விவகாரம் முற்றிலும் உள்ளக விவகாரம் என்ற ஜேபிவியின் கருத்தியலை மேற்கு – ஐரோப்பிய நாடுகளும் இந்தியாவும் ஏற்றுக்கொண்டுள்ளன என்பதை இந்த ஆண்டு அநுர நிரூபித்துள்ளார்.

அத்துடன் மனித உரிமை மீறல் பிரச்சினைகள் – போதைப் பொருள் பிரச்சினைகள் மற்றும் ஊழல் அதிகாரத் துஷ்பிரயோகம் என்ற விவகாரங்கள் எல்லாமே கடந்த 76 வருட ஆட்சியில் பழம் பெரும் கட்சிகள் விட்ட தவறு என்றும், 2026 ஆம் ஆண்டு அவை முற்றாக ஒழிக்கப்பட்டு வடும் என்ற வாக்குறுதிகளையும் அநுர சர்வதேசத்துக்கு வழங்கியியுள்ளார்.

குறிப்பாக நிதி வழங்கும் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி போன்ற பொது நிறுவனங்களுக்கு அந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.

அதேநேரம், ரணில், மகிந்த. கோட்டாபய ஆகிய தலைவர்கள் வடக்குக் கிழக்கில் தங்கள் தமிழ் முகவர்களை பயன்படுத்தி, தமிழ்த் தேசிய அரசியல் சிந்தனைகளை மடைமாற்ற முற்பட்டு தோல்வி கண்ட அணுகுமுறையில் இருந்து ஜேபிவி மாறுபட்ட உத்தி ஒன்றை கையாள்வதை தமிழ்த்தரப்பு அறியாமல் இருப்பதும் வேடிக்கை.

குறிப்பாக வடக்கு கிழக்கில் மக்கள் மத்தியில் செல்வாக்குள்ள தமிழர்களை வேட்பாளர்களாக ஜேபிவி கண்டறிந்துள்ளது.

2024 ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் அனுபவங்களின் பிரகாரம், வரவுள்ள மாகாண சபைத் தேர்தல் அல்லது அடுத்து வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலாகவும் இருக்கலாம், அதில் செல்வாக்குள்ள தமிழர்கள் பலரை போட்டியிட வைப்பதற்கான ஏற்பாடுகள் இப்போதிருந்தே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட முன்கூட்டிய மதிப்பீடுகள் – தயாரிப்புகளில், ஜேவிபி மிக நுட்பமாக கையாளும் திறன் கொண்டது.

இப் பின்னணியில் முன்னாள் நீதியரசர் இளஞ்செழியன் உள்வாங்கப்பட்டிருக்கிறாரா என்ற சந்தேகம் எழுகின்றது. ஆனால் தமிழ்த்தேசியக் கட்சிகள் எதனையும் அறியாமல் இருக்கின்றன.

புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் அது பற்றி புரிந்து கொண்டதாக இல்லை. சில புலம்பெயர் தமிழ் அமைப்புகள் ஜேவிபியின் காய்நகர்த்தல்களை நன்கு தெரிந்து செயற்படுகின்றன என்றும் கூறலாம். அதில் உண்மை இல்லாமலில்லை.

ஆகவே அமெரிக்க – இந்திய அரசுகள் மற்றும் சீனா போன்ற நாடுகளை கையாளும் ஜேபிவியின் அணுகுமுறை என்பது இலங்கைத் தேசியம் என்ற ஒற்றைக் கொள்கைக்கும், ஜேபிவியின் அடிப்படைக் கொள்கைக்கும் வலுவூட்டப்படுகின்ற அநுரவின் நுட்பமான காய்நகர்த்தல் என்றால் அது மிகையாகாது

Share This