
அயர்லாந்தின் டூவாம் நகரில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வாராய்ச்சியில் அதிர்ச்சி தகவல்
அயர்லாந்தின் டூவாம் நகரில் உள்ள முன்னாள் தாய்-சேய் இல்லத்தின் வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வாராய்ச்சியில் மேலும் 11 குழந்தைகளின் உடலங்கள் அடங்கிய புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் இதே காப்பக வளாகத்திலிருந்த பழைய கழிவுநீர் தொட்டி ஒன்றிற்குள் இருந்து 796 குழந்தைகளின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன.
தற்போது மேற்கொள்ளப்படும் அகழ்வாராய்ச்சியின் போது, ஏற்கனவே உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்திலிருந்து 15 மீட்டர் தொலைவில் மேலும் 11 குழந்தைகளின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
டப்ளின் நகரிலிருந்து 220 கிலோமீட்டர் மேற்கே அமைந்துள்ள இந்த காப்பகம் 1925 ஆம் ஆண்டு முதல் 1961 ஆம் ஆண்டு வரை செயற்பட்டு வந்தது.
அந்த காலப்பகுதியில், திருமணத்திற்குப் புறம்பாகப் பிள்ளைகளைப் பெற்றெடுத்த தாய்மார்கள், சமூகத்தாலும் குடும்பத்தாலும் ஓரங்கட்டப்பட்டு இந்த காப்பகங்களில் தங்கவைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
