அநுர உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவரா?

அநுர உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவரா?

தையிட்டியில் சட்டவிரோதமாக தனியார் காணியில் கட்டப்பட்ட புத்த கோயிலை இடிக்க முடியாது என்று அண்மையில் அநுர தெரிவித்துள்ள கருத்துக்கு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கண்டனம் வெளியிட்டுள்ளது.

தமிழ் பகுதிகளில் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டுவரும் பௌத்தமயமாக்கல் சிங்களமயமாக்கல் திட்டங்களை நிறுத்தும்படியும் அவர் கோரியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் சிங்கள மக்களோ பௌத்த மக்களோ வாழாத இடங்களில் இலங்கை அரசாங்கமும் பௌத்த பிக்குகளும் இராணுவத்தினரை முன்னிறுத்தி புதிய பௌத்த ஆலயங்களைக் கட்டத்தொடங்கினர்.

வடக்கு-கிழக்கு மாகாணங்களை சிங்கள பௌத்த மயமாக்குதலே அதனுடைய பாரிய நோக்கமாக இருந்தது. அந்த வகையில் வடக்கு மாகாணத்தின் பல்வேறுபட்ட இடங்களில் புத்த கோயில்கள் உருவாக்கப்பட்டன.

யாழ்ப்பாணத்தில் நாவற்குழி, மன்னாரில் திருக்கேதீஸ்வரம், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இத்தகைய புதிய பௌத்த ஆலயங்கள் உருவாக்கப்பட்டன.

இதேபோன்று கிழக்கு மாகாணத்திலும் குறிப்பாக திருகோணமலை மாவட்டத்திலும் புதிய புதிய பௌத்த ஆலயங்கள் இன்றும் கட்டியெழுப்பப்பட்டு வருகின்றது.

வடக்கு-கிழக்கு என்பது தமிழ் மக்களின் தாயகம் என்பதை இல்லாமற் செய்வதற்கும் இந்த சிங்கள பௌத்தமயமாக்கல் என்பது அரசிற்குத் தேவையாக இருந்தது. அதனுடைய தொடர்ச்சியாகத்தான் பலாலி தையிட்டியிலும் பாதுகாப்பு வலயத்துக்குள் இருந்த தமிழ் மக்களுக்கு உரித்தான காணிகளை பலாத்காரமாகக் கையகப்படுத்தி அங்கு ஒரு பாரிய புத்த கோயிலை நிறுவியிருக்கின்றனர்.

இந்த புத்த கோயில் கட்ட ஆரம்பிக்கின்றபொழுது யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்திக் குழுவானது தனியார் காணிகளை பலாத்காரமாகக் கையகப்படுத்தியது சட்டவிரோதமானது என்றும் எந்தவிதமான அனுமதிகளும் பெற்றுக்கொள்ளப்படாமல் புத்த கோயில் கட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அந்த செயற்பாடு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் ஆரம்பத்திலேயே வலியுறுத்தியிருந்த போதிலும்கூட அது எந்த விதத்திலும் கவனத்தில் எடுக்கப்படாமல் இப்பொழுது அந்த புத்தகோயில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இப்பொழுது புதிதாகப் பதவியேற்றுள்ள இடதுசாரி அரசாங்கமானது சாதி, மத, இன பேதங்களற்ற சமத்துவமான இலங்கையை கட்டியெழுப்ப வேண்டுமென பேசி வருகின்றது. ஆனால் வடக்கு-கிழக்கில் பௌத்த மதத்தை முன்னிலைப்படுத்தி சட்டவிரோதமாக உருவாக்கப்பட்டு வரும் பௌத்த ஆலயங்கள் தொடர்பாக இன்னும் வாய்மூடி மௌனியாகவே இருந்து வருகின்றது.

யுத்த காலத்தில் உருவாக்கப்பட்ட அதியுயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் இருந்த பல்வேறுபட்ட சைவ கிறித்தவ ஆலயங்கள் எந்தவிதக் கேட்டுக்கேள்வியும் இல்லாமல் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.

இதே போன்று தென் பகுதியிலும்கூட பள்ளிவாசல்களும் சைவக் கோயில்களும் இடிக்கப்பட்டுள்ளன. ஆனால் இப்பொழுது தையிட்டியில் கட்டப்பட்டுள்ள சட்டவிரோதமான ஒரு பௌத்த ஆலயம் எக்காரணம் கொண்டும் இடிக்கப்படமாட்டாது என்று அனுரகுமார திஸ்ஸநாயகவின் தலைமையிலான இடதுசாரி அரசாங்கமும் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கின்றது.

இது சிங்கள மக்களுக்கு ஒரு சட்டம் ஏனைய மக்களுக்கு ஒரு சட்டம் என்பதைத் தெளிவுபடுத்திக் காட்டுகின்றது. சாதி, மத, மொழி, இன பேதமற்ற ஓர் இலங்கையை உருவாக்க வேண்டுமென இப்பொழுது உள்ள புதிய அரசாங்கம் உண்மையிலேயே விரும்புமாக இருந்தால், வடக்கு-கிழக்கு எங்கும் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் அனைத்து பௌத்த ஆலயங்களின் கட்டுமானப் பணிகளும் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.

சிங்கள மக்களோ பௌத்தர்களோ இல்லாத இடங்களில் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த பௌத்த ஆலயங்கள் தொடர்பாக அரசாங்கம் தெளிவான முடிவிற்கு வரவேண்டும். தன்னை ஓர் இனவாதியோ மதவாதியோ அல்ல என்று காட்ட முயற்சிக்கும் அனுர அரசாங்கமானது நடைமுறையில் இனவாதத்தையும் மதவாதத்தையும் முன்னிலைப்படுத்துவதை முழுமையாக உடனடியாகக் கைவிட வேண்டும்.

தையிட்டி புத்த கோயில் நிர்மாணம் என்பது ஒரு குறியீடு மட்டுமே. ஆகவே இவற்றிற்கெதிரான கடுமையான கண்டனத்தை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பதிவு செய்வதுடன் இதற்காக மக்கள் முன்னெடுக்கும் அனைத்து போராட்டங்களுக்கும் ஆதரவளிக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அனுர அரசாங்கம் மாற்றத்தை உருவாக்குவார்கள் என்ற நம்பிக்கையில் அந்த கட்சியில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்கள் சிலரை தமிழ் மக்கள் வாக்களித்து தெரிவுசெய்திருக்கின்றார்கள்.

ஆகவே அந்தப் பிரதிநிதிகள் தமது மக்கள் நலன்சார்ந்து அவர்கள் நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் இவ்வாறான சட்டவிரோத செயல்களுக்கு எதிராக குரல்கொடுக்க முன்வரவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share This