அடிலெய்ட் டெஸ்ட்: டொன் பிராட்மேனின் சாதனையை சமன்செய்ய காத்திருக்கும் விராட்
இந்திய கிரிக்கெட் அணி தற்போது அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு, போடர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி பார்முக்கு திரும்பியிருந்தார். அவர் இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 100 ஓட்டங்களை குவித்திருந்தார்.
இந்தப் போட்டியில் இந்திய அணி 295 ஓட்டங்களால் வெற்றிபெற்றிருந்தது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையில் அடிலெய்டில் இடம்பெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில், சர் டொன் பிராட்மேனின் மிகப்பெரிய சாதனையை சமன் செய்யும் முனைப்பில் விராட் கோலி உள்ளார்.
1930-1948 வரை இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பிராட்மேன் 19 போட்டிகளில் 11 சதங்களை அடித்ததன் மூலம், ஒரு நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு அதிக சதம் அடித்த வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்துள்ளார்.
மறுபுறம் விராட் கோலி, 2011ஆம் ஆண்டு முதல் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு, 43 ஆட்டங்களில் 10 சதங்களை அடித்துள்ளார்.
இந்நிலையில், அடிலெய்டில் இடம்பெறும் போட்டியில் பிராட்மேனின் சாதனையை சமன் செய்வதற்கான பிரகாசமான வாய்ப்பு விராட் கோலிக்கு உள்ளது.
அடிலெய்ட் மைதானத்தில், விராட் கோலி 63.62 சராசரியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகளில் 509 ஓட்டங்களை குவித்துள்ளதுடன், மூன்று சதங்களையும், ஒரு அரைச் சதமும் அடித்துள்ளார்.
இதனால், டிசம்பர் ஆறாம் திகதி தொடங்கும் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா இடையேயான பகல்-இரவு டெஸ்டில் விராட் கோலி சதம் அடிப்பதற்கு முனைப்பு காட்டுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்து அதிக சதமடித்த வீரர்கள்
டொன் பிராட்மேன் (அவுஸ்திரேலியா) – 11 இங்கிலாந்தில்
விராட் கோலி (இந்தியா) – 10 அவுஸ்திரேலியாவில்
ஜெக் ஹோப்ஸ் (இங்கிலாந்து) – 09 அவுஸ்திரேலியாவில்
சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) – 09 இலங்கையில்
சர் விவ் ரிச்சர்ட்ஸ் (மேற்கிந்திய தீவுகள்) – 8 இங்கிலாந்தில்
சுனில் கவாஸ்கர் (இந்தியா) – 7 மேற்கிந்திய தீவுகளில்