அகதிகளை அழைத்து அரசியல் செய்ய வேண்டாம் பிரதியமைச்சர்

அகதிகளை அழைத்து அரசியல் செய்ய வேண்டாம் பிரதியமைச்சர்
மியன்மார் அகதிகள் விடயத்தை சுய அரசியல் இலாபத்திற்காக சிலர் அணுகி வருவதை நாம் எப்போதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார்.
ஜமாலியா முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள அகதிகளை இன்று (22) காலை பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மிமனவுடன் சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சட்ட விரோத குடிவரவாளர்களாக வருகை தந்துள்ள மியன்மார் – ரோஹிங்யா அகதிகளை ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் தேவையான உதவிகளை செய்து வருகின்றோம். அந்தவகையில் அவர்களுக்கான உணவு, உடை, இருப்பிடம், சுகாதாரம் உள்ளிட்ட தேவைகளை செய்து வருகின்றோம்.
குறித்த அகதிகள் கடந்த வெள்ளிக்கிழமை (20) திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டனர். உடனடியாக அங்கே நடமாடும் மருத்துவ முகாமினை மேற்கொண்டிருந்தோம். பின்னர் சட்டத்தின் முன் இவர்கள் நிறுத்தப்பட்டார்கள், சட்டத்தின் பிரகாரம் மாலுமிகள் 12 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஏனைய 103 பேரும் தற்போது ஜமாலியா பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த விடயத்தை சுகாதார துறையினர், நிர்வாகத் துறையினர், பாதுகாப்புத் தரபினர், வெளிவிவகார அமைச்சு உட்பட பல துறை சார்ந்தவர்கள் ஒன்றாக இயங்கி வருகின்றார்கள்.
ஆனால் சிலர் இந்த விடயத்தை தங்கள் சுய அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்தி வருவதை நாம் எப்போதும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. ஒரு பாரிய விடயத்தை நாம் முன்னெடுத்து வருகின்றோம் இந்த வேளையிலே ஒருசில குறைபாடுகள் இருக்கத்தான் செய்யும். நாட்டைப் பொறுத்த வரையிலும் திருகோணமலையை பொறுத்த வரையிலும் இது புதிய அனுபவம் இந்த விடயத்தை அணுகுவதற்கான ஒட்டுமொத்த அம்சங்களை இந்த அரசாங்கம் கொண்டிருக்கின்றது. அத்துடன் மிகவும் சிறப்பாக அனைத்து விதத்திலும் அணுகி வருகின்றது.
ஆனாலும், தமது அரசியல் இலாபத்தினை கருத்தில் கொண்டு ஒரு சிலர் இதனை வைத்து அரசியல் பிழைப்ப வாதத்தை மேற்கொள்ள விரும்புவார்களாக இருந்தால் அதனை நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. அத்துடன் நீங்கள் ஏதாவது உதவிகள் செய்ய விரும்பினால் மாவட்ட செயலாளர் ஊடாகவோ அல்லது பிரதேச செயலாளர் ஊடாகவோ செய்ய முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Share This