காசாவில் மீண்டும் போர் ஆரம்பம்! இஸ்ரேல் விமானத் தாக்குதல், கமாஸ் மீது நெத்ன்யாகு குற்றச்சாட்டு

காமஸ் இயக்கம் இஸ்ரேல் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தியதால் தெற்கு காசா பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை விமானக் குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சவுதிகசற் (saudigazette) என்ற ஆங்கில செய்தி தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
ரஃபாவில் ஹமாஸ் போராளிகள் ரெக்கெட் மூலம் இயக்கப்படும் கையெறி குண்டுகளை வீசியதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியதுள்ளதுடன் பதில் தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்ன்யாகு, பாதுகாப்பு அதிகாரிகளுடன் உடனடியாக ஆலோசனை நடத்தியதாகவும் போர் நிறுத்த மீறல்களுக்கு எதிராக “வலுவான நடவடிக்கை” (Strong Action) எடுக்குமாறு இராணுவத்திற்கு உத்தரவிட்டதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் முழு அளவிலான போரை தவிர்க்குமாறு பெஞ்சமின் நெத்ன்யாகு பரிந்துரைத்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதேநேரம் ரஃபா மோதல்களில் தாங்கள் ஈடுபடவில்லை என்று ஹமாஸ் இயக்கம் மறுத்துள்ளது, போர் நிறுத்தத்தில் உறுதியாக இருப்பதாகவும் கமாஸ் தெரிவித்துள்ளது.
இதேவேளை, காசாவில் மேற்கொள்ளப்பட வேண்டிய மனிதாபிமான பணிகள் மற்றும் சுகாதார சேவைகளை வழங்க இஸ்ரேல் மறுத்து வருவதாகவும், கமாஸ் இயக்கம் கைது செய்து வைத்திருக்கும் இஸ்ரேல் இராணுவ அதிகாரிகள் மற்றும் பொது மக்களை உயிருடன் விடுதலை செய்யும் ஏற்பாடுகளிலேயே இஸ்ரேல் அதிகளவு கவனம் செலுத்துவதாகவும் கமாஸ் குற்றம் சுமத்தியுள்ளது.
உயிருடன் கைதான பலரை தாங்கள் இஸ்ரேலிடம் ஒப்படைத்துள்ளதாகவும், கமாஸ் தெரிவித்துள்ளது.
அதேவேளை, இன்று இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் மேலும் தாக்குதல் நடைபெறாது என்பதை இஸ்ரேல் – கமாஸ் உறுதிப்படுத்த வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறை வலியுறுத்தியுள்ளது.
ஆனால் மீண்டும் தாங்கள் போரை தொடங்கவில்லை என்றும், கமாஸ் இயக்கம் மீது அமெரிக்க – இஸ்ரேல் அரசுகள் தேவையற்ற அவதூறுகளை பரப்புவதாகவும் கமாஸ் இயக்கம் குற்றம் சுமத்தியுள்ளது.