அமெரிக்க பாகிஸ்தான் உறவும் இந்தியாவும் – காசா போரை நிறுத்த முடியாத வல்லரசுகள்

அமெரிக்க பாகிஸ்தான் உறவும் இந்தியாவும் – காசா போரை நிறுத்த முடியாத வல்லரசுகள்

*இரு அரசு தீர்வு என வல்லரசுகள் கூறினாலும் முழு அளவில் ஏற்கவில்லை…

*இஸ்ரேல் பிரதமர் உரையாற்றியபோது எழுந்து சென்றமை பாராட்டுக்குரியது. ஆனால்!

*ஒருமித்த குரலில் செயற்படாதவரை தமிழர்களுக்கு இயற்கை நீதியும் கிடையாது

அ.நிக்ஸன்-

அமெரிக்காவுடன் நெருக்கமான உறவை பேணி வரும் நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், இராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஆகியோர், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை நேற்று முன் தினம் சந்தித்து உரையாடியுள்ளனர்.

அமெரிக்க – பாகிஸ்தான் பாதுகாப்பு செயற்பாடுகள் உள்ளிட்ட விவகாரங்கள் பேசப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சந்திப்பில் உள்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ துணை ஜனாதிபதி ஜே டி வான்ஸ் ஆகியோர் பங்குபற்றினர்.

மார்கோ ரூபியோதான் கடந்த வாரம் இந்தியா மீது மேலும் பொருளாதார தடைகளை விதிக்க நேரிடும் என்று எச்சரித்திருந்தார்.

இதன் காரணமாக இச் சந்திப்பு குறித்து புதுடில்லி ஊடகங்கள் சந்தேகங்களை வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தான் அமெரிக்காவுடன் 2004 ஆம் ஆண்டு மேற்கொண்டிருந்த கூட்டாளி உறவு (Collective Relationship) இந்திய அரசுக்கு அப்போது அச்சுறுத்தலாக இருந்த பின்னணியில், பிரதமர் மன்மோகன் சிங் அப்போது சில உத்திகளை கையாண்டிருந்தார்.

ஆனால் 2016 இல் இருந்து நரேந்திர மோடியின் ஆட்சியில் ட்ரம் இந்தியாவுடன் நெருக்கமாக இருந்தார்.

பாகிஸ்தான் உறவையும் மெதுவாக ஒதுக்கியிருந்தார்.

ஆனால் 2025 இல் ட்ரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தில் விதித்த பொருளாதார வரிகள் அதிகமாக இருந்தன.

அத்துடன் ரசிய – உக்ரெயன் போரில் இந்தியா ரசியாவுக்கு ஆதரவாக செயற்பட்டும் வருகின்றது.

இப் பின்புலத்தில் தான் டொனால்ட் ட்ரம் மீண்டும் பாகிஸ்தான் அரசுடன் உறவை பேண விரும்பினார் போலும்.

சந்திப்பின் பின்னர் வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்க – பாகிஸ்தான் புதிய உறவு என்ற தொனி தெரிகிறது.

அதேநேரம் —-

இந்தோ – பசுபிக் விவகாரத்தில் பாகிஸ்தான் சீனாவுக்கு ஆதரவாக உள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவுடனான புதிய உறவு சீன – பாகிஸ்தான் உறவை கேள்விக்குள்ளாக்கும் என்று இந்திய ஊடகங்கள் கிண்டலாக விமர்சித்துள்ளன.

குறிப்பாக அதானியின் ஆங்கில ஊடகங்கள் அமெரிக்க – பாகிஸ்தான் உறவு தற்காலிகமானது என்ற தொனியில், அதேநேரம் முன் எச்சரிக்கையோடும் நோக்குகின்றன.

புவிசார் அரசியல் எப்போதும் நிலையானது அல்ல. அது பொருளாதார – இராணுவ நலன் அடிப்படையில் மாறக் கூடிது.

புவிசார் அரசியல் போட்டிக்குள் சிக்குப்படாமல், சர்வதேச சட்ட நுட்பங்கள் ஊடக நகர வேண்டும் என பல சந்தர்ப்பங்களில் ஆதாரங்களோடு சுட்டிக்காட்டி எழுதினாலும், தமிழர் தரப்பு தேர்தல் அரசியல் வியூfங்களில் மாத்திரம் அதிக கவனம் செலுத்துகிறது.

பாலஸ்தீனம் தனிநாடாக வேண்டும் என அறிவித்துள்ள மேற்கு – ஐரோப்பிய நாடுகள் முழு மனதோடு அதனை அறிவித்தாக கூற முடியாது.

“இரு அரசு தீர்வு” என்று மேலோட்டமாக பிரகடணம் செய்யப்பட்டு பல வருடங்கள் சென்ற பின்னரும் கூட, இஸ்ரேல், காசா மீது நடத்தும் இன அழிப்பு போரை எவராலும் தடுத்து நிறுத்த முடியவேயில்லை…

சர்வதேச நீதிமன்றம் கூட பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் மேற்கொண்ட குடியேற்றம் சட்டரீதியானதா என்ற ஆய்வை செய்ய வேண்டும் என உத்திரவிட்டிருந்தது.

இனஅழிப்பு போரை நிறுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இஸ்ரேல் அரசுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் கடந்த வாரமும் விசாரணை நடைபெற்றது.

இருந்தாலும் —-

வல்லரசு நாடுகள் தமது அரசியல் நலன் அடிப்படையில் வேடிக்கை பார்க்கின்றன. குழந்தைகள் – கர்ப்பிணி பெண்கள் கொல்லப்படுவதைக் கூட கண்டு கொள்ள முடியவில்லை.

ஐநா கூட்டத்தில் இஸ்ரேல் பிரதமர் உரையாற்றிய போது பல நாடுகளின் தலைவர்கள் தமது ஆசனத்தில் இருந்து எழுந்து சென்றமை பாராட்டுக்குரிது தான்.

ஆனால் —

இஸ்ரேலுக்கு எதிரான நடைமுறை செயற்பாடு என்பது புவிசார் அரசியல் நலன் நோக்கில் பின்னடிப்பதன் காரணம் என்ன?

ஆக, கமாஸ் இயக்கத்தை மாத்திரம் பயங்கரவாத அமைப்பு என்று தொடர்ந்து முத்திரை குத்துகின்றன…

ஆகவே —

சர்வதேச நீதி என்பது காத்திருப்புத் தான்.

ஆனாலும் —-

பாலஸ்தீன மக்கள், இழப்புகள் – வலிகளோடு ஒருமித்த குரலில் தமது அரசியல் நகர்வை செய்து கொண்டு தான் இருக்கின்றனர்.

”இயற்கை நீதி” தாமதமாகும்… ஆனால் நிலையானது…

ஆகவே, ஒருமித்த குரலில் செயற்படாதவரை ஈழத் தமிழர்களுக்கு இயற்கை நீதியும் சந்தேகமே…

Share This