கரையோர பிரதேசங்களில் உள்ள சுனாமி எச்சரிக்கை கோபுரங்கள் இயங்கவில்லை!

வடக்கு கிழக்கு உள்ளிட்ட இலங்கைத்தீவின் கரையோர மாவட்டங்களில் திட்டமிடப்பட்ட சுனாமி பயிற்சிகள் (IOWave25) இன்று புதன்கிழமை நடைபெற்றன. ஆனால், ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த 77 சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரங்களும் தற்போது செயல்படவில்லை.
இது தொடர்பாக அணர்த்த முகாமைத்துவ மையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சம்பத் கொடுவேகொட விசனம் வெளியிட்டுள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில், முன் எச்சரிக்கை கோபுரங்கள் எதுவும் செயற்படவில்லை என்று கூறினார்.
இந்த கோபுரங்களுக்கு சமிக்ஞைகளை வழங்கும் செய்மதியில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இந்த கோபுரங்கள் சுமார் மூன்று வருடங்களுக்கு முன்னர் செயலிழந்தன.
சர்வதேச நிறுவனம் ஒன்றின் ஒத்துழைப்புடன் மாத்திரமே இதனை மீண்டும் செயற்படுத்த முடியும் என்று அவர் கூறினார்.
கோபுரங்களின் செயல்பாட்டை மீளவும் இயக்க வெளியுறவு அமைச்சின் மூலம் சர்வதேச அமைப்புகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது என்றும் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சம்பத் கொடுவேகொட தெரிவித்தார்.
அதேவேளை சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரங்கள் ஒரே ஒரு முறை மட்டுமே எனவும், மேலும் 15க்கும் மேற்பட்ட எச்சரிக்கை முறைகள் இருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.
இந்த கோபுரங்கள் மூலம் எச்சரிக்கை ஒரு குறிப்பிட்ட சுற்றளவில் மட்டுமே கேட்கக்கூடியது. இலங்கையின் முழு கடலோரப் பகுதியையும் இந்த கோபுரங்கள் வழியாக கூட மறைக்க முடியாது. இருப்பினும், அவற்றை சரிசெய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், காலி மற்றும் களுத்துறை ஆகிய கரையோர மாவட்டங்களில் சுனாமி முன் எச்சரிக்கைப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
