பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, முத்துராமலிங்க வீதியைச் சேர்ந்த கார்த்திக் முருகன் – பாலசுந்தரி தம்பதியின் மகன் கருப்பசாமி.
பத்து வயதான இச் சிறுவன் ஒரு வாரமாக அம்மை நோயினால் பாாதிக்கப்பட்டு பாடசாலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளான்.
இந்நிலையில் நேற்று பெற்றோர் வேலைக்குச் சென்றதால் கருப்பசாமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளான்.
வீட்டில் இருந்த கருப்பசாமி திடீரென காணாமல் போயுள்ளான். எங்கு தேடியும் கிடைக்காததால் பொலிஸில் அவனது பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வழக்குப் பதிவு செய்த பொலிஸார் காணாமல் போன சிறுவனை தேடியுள்ளனர்.
இந்நிலையில் பக்கத்து வீட்டு மாடியில் கருப்பசாமி சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.
மாடியில் மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்த சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், பல மணி நேரத்துக்கு முன்னதாகவே சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே சிறுவன் அணிந்திருந்த தங்கச் சங்கிலி, மோதிரம் உள்ளிட்டவை காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நகைக்காக சிறுவன் கொலை செய்யப்பட்டுள்ளானா? என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.