
சுப்பர் எட்டுக்கு நுழையுமா இலங்கை? இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்று உறுதி
டி20 உலகக் கிண்ணத் தொடரின் ‘பி’ குழுவுக்கான மிக முக்கியமான போட்டியில், இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இன்று கண்டி, பல்லேகல சர்வதேச மைதானத்தில் மோதுகின்றன.
குழுநிலையில் விளையாடிய முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றியீட்டி 4 புள்ளிகளுடன் இலங்கை அணி முதலிடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால், இலங்கை அணி சுப்பர் எட்டுச் சுற்றுக்குத் தகுதி பெறுவதை உறுதி செய்துவிடும். மறுபுறம், சிம்பாப்வேயிடம் தோல்வி கண்ட அவுஸ்திரேலிய அணி, இன்றைய ஆட்டத்தில் தோற்கும் பட்சத்தில் கிட்டத்தட்ட சுப்பர் எட்டு வாய்ப்பை இழந்துவிடும். எனவே சுப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமாயின் அவுஸ்திரேலிய அணிக்கு இப்போட்டியில் வெற்றி பெறுவது கட்டாயமாகும்.
கடந்த போட்டிகளில் இலங்கையின் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு வலுவாக இருந்ததால், அதே வெற்றியணி இன்றும் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சொந்த மண்ணில் விளையாடுவது தசுன் ஷானக்க தலைமையிலான அணிக்குச் சாதகமாக இருந்தாலும், இதுவரை சொந்த மண்ணில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக ஆடிய 7 போட்டிகளில் 3-இல் மட்டுமே இலங்கை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிம்பாப்வே அணியும் தனது முதல் இரு போட்டிகளில் வென்றுள்ள நிலையில், ‘பி’ குழுவில் அடுத்த சுற்றுக்கு முன்னேற மும்முனைப் போட்டி நிலவுகிறது. இதனால் இன்றைய ஆட்டம் இரு அணிகளுக்குமே பெரும் சவாலாக அமையும். விறுவிறுப்பான இந்தப் போட்டி இன்று இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
